பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


138 பூர்ணசந்திரோதயம்-2 துணிவிற்காகவும் அவரைச் சரியானபடி தண்டிக்க வேண்டும் என்ற ஆத்திரம் கொண்டிருந்ததாலும், அவள் தனது வாக்குறுதியை நிறைவேற்ற விரும்பவில்லை. ஆகையால், பூர்ணசந்திரோதயம் மேன்மாடத்தை விட்டுக் கீழே இறங்கி வாசலை நோக்கிச் சென்றபோது, இடையில் காணப்பட்ட கோவிந்தசாமியைக் கண்டு, 'அப்பா உன்னுடைய பெயரென்ன?’ என்று கேட்க, அவன் தனது பெயர் கோவிந்தசாமி என்று சொன்னான். உடனே பூர்ணசந்திரோதயம், “சரி; எஜமானர் இந்நேரம் என்னோடு சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்து மிகவும் அலுத்துப் போய் படுத்துத்துங்குகிறார்; நாளைக் காலை வரையில் யாரும் வந்து தம்மை எழுப்பக் கூடாதென்று உன்னிடத்தில் சொல்லிவிட்டுப் போகும் படி உத்தரவு செய்தார். ஆகையால், நீயாவது வேறே யாராவது மேலே போய் அவருடைய தூக்கத்தைக் கெடுக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு வெளியில் போய் விட்டாள். கோவிந்தசாமி அதை உண்மையென்று நம்பி மற்ற வேலைக்காரர்களை எல்லாம் படுக்கைக்கு அனுப்பிவிட்டுத் தானும் போய்ப் படுத்துத்துங்கிவிட்டான். மருங்காபுரி ஜெமீந்தாரோ, இரும்புப் பொறியில் அகப்பட்ட எலி போலத் தமது நாற்காலியிலிருந்து அப்புறம் இப்புறம் திரும் பவும் மாட்டாமல் தத்தளித்துத் தளர்ந்து வேதனைப் பட்டிருந்தார். ஆனாலும், பூர்ணசந்திரோதயம் கீழே இறங்கி தமது உத்தரவைத் தெரிவித்தவுடனே கோவிந்தசாமி மேலே வந்து தம்மை அந்தச் சங்கடத்திலிருந்து விடுவிப்பான் என்று எதிர்பார்த்தவராய்த் தமது துன்பங்களை ஒருவாறு பொறுத்துக்கொண்டிருந்தார். அவ்வாறு அரை நாழிகை நேரம் கழிந்தது. கோவிந்தச்ாமி வரவில்லை. பூர்ணசந்திரோதயம் அவனை வரச் சொல்லாமல் போய்விட்டாள் என்ற எண்ணம் உண்டாயிற்று. உடனே அவரது மனதில் பெருத்த கலக்கமும் அச்சமும் கவலையும் உண்டாகி வருத்தத் தொடங்கின.