பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/248

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


234 . பூர்ணசந்திரோதயம்-2 இருக்கிறது என்றும் ஓர் எண்ணம் எழுந்து ஓயாமல் அவளது மனதை வதைத்து சஞ்சலப்படுத்திக் கொண்டிருந்தது. அன்றைய இரவு முழுவதும் தூக்கம் என்பதே பிடியாதவளாய், அவள் விசனித்து மனம் நொந்து, "ஐயோ தெய்வமே என் தலைவிதி இப்படியா இருக்க வேண்டும். நான் ஜென்மம் எடுத்த முதல் ஓயாத் துன்பமும் ஒழியா வேதனையுமாகவே இருக்கின்றனவே. எல்லாம் கெட்ட காரியம்! எல்லாம் ரகசியம். இப்படி அவஸ்தைப் பட்டுக்கொண்டு உயிர் வாழ்வதைவிட இறந்து போவது சுகமாக இருக்கும் என்பது நிச்சயம்! இன்னம் எவ்வளவு காலத்துக்கு நான் இப்படிக் கிடந்து உழல்கிறது! ஐயோ! என்னால் சகிக்க முடியவில்லையே! இதற்கு நான் ஏதாவது வழி தேடிக் கொண்டுதான் தீரவேண்டும் ' என்று தனக்குள் எண்ணமிட்டு வருந்தினவளாய்க் கிடந்து அந்த இரவைப் போக்கிக் கொண்டிருந்தாள். மகா பயங்கரமான சில சம்பவங்களின் நினைவு அடிக்கடி அவளது மனதில் உண்டாகி உண்டாகி அவளது உடம்பை அடிக்கடி தூக்கிப் போட்டது. மறுபடியும் அவள் தனது புருஷனது கொடுமையைப் பற்றி நினைத்தாள்; அடாடா ஆரம்பத்தில் இந்தப் புருஷரிடத்தில் நான் எவ்வளவு பிரியம் வைத்து இவரால் எப்படிப்பட்ட கஷ்டநஷ்டங்களுக்கு எல்லாம் ஆளானேன். அதையெல்லாம் மறந்து, இவர் என்னை செக்கிழுக்கும் மாட்டை விடக் கேவலமாக அல்லவா நடத்தி வருகிறார். ஒரு நிமிஷம் கழிவது ஒரு யுகமாகவும் நரக வேதனையாகவும் அல்லவா இருக்கிறது. சேச்சே! இந்த மனிதரிடம் இருந்து வாழ்வதை விட எங்கேயாவது கிணற்றில் குளத்தில் விழுந்து செத்தாவது, இந்தக் கொடுமைகளை நிவர்த்தி செய்து கொள்வது உத்தமமானது. இவரிடம் இருப்பதைவிட, வேறே யாரிட மாவது போய் அடிமை வேலை செய்தோ, வைப்பாட்டியாக இருந்தோ காலம் தள்ளினால், அதுகூட இதைவிட அதிக சிலாக்கியமாக இருக்குமே" என்று அவள்தனக்குள் பிரலாபித்து அழுதபடி இருக்க அந்த இரவும் கழிந்தது.