பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/307

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 293 சிற்றரசர்களது வாசஸ்தலங்களைக் கடந்தே பூனாவுக்கு போய்ச் சேர வேண்டும். மனிதர்அவ்வளவு நீண்ட பிரயாணங்களுக்குப் பிரத்தியேகமாக வண்டிகள் அமர்த்திக் கொண்டு போக வேண்டுமே அன்றி கூலி வண்டிகள் சதாகாலமும் அகப்படுவது அரிதாக இருக்கும். சனிக்கிழமையன்று ராஜாசத்திரத்தில் வந்துதங்கிய கலியான சுந்தரம் சத்திரத்தின் மணியக்காரரைக் கண்டு பேசி அவருக்குப் பெரிய பணத்தொகை இனாம் கொடுத்துப் பழக்கம் செய்து கொண்டதன்றி அம்மாளு முதலிய தாதிப்பெண்கள் வந்து இறங்கிய முதல் அவ்விடத்தில் நடந்த வரலாறுகளை எல்லாம் அவரிடம் கேட்டறிந்து கொண்டான். அந்தத் தாதிப் பெண்கள் மறுநாள் காலையில் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் பிரயாணம் போகத் தீர்மானித்து இருப்பதாகவும், அதற்காக அந்த ஊர் அரண்மனையிலிருந்து பெரிய பெட்டி வண்டி யொன்றும் மாட்டுவண்டிகள் இரண்டும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன என்றும் அந்த மணியக்காரர் சொல்ல, நமது கலியாண சுந்தரம் தெரிந்து கொண்டான். அன்றைய இரவில் தனக்கு வேண்டிய ஆகாரம் படுக்கை முதலிய செளகரியங்களை எல்லாம் அதே மணியக்காரரைக் கொண்டு சேகரித்துக்கொண்ட நமது யெளவனப் புருஷன் கடைசியாக புறப்பட்டு அந்தத் தாதிப்பெண்களைத் தொடர்ந்து பிரயாணம் போக வேண்டும் ஆதலால், அவர்கள் புறப்படும் நேரத்தில் வரும் படி தனக்கும் ஒருவண்டி சேகரித்துக் கொடுக்க முடியுமா என்று கேட்க அந்த மணியக்காரர், 'அவ்வளவு தூரம் பிரயாணம் போகக் கூடிய வண்டிகளே இந்த ஊரில் இல்லை. அப்படிப்பட்ட வண்டி இந்த ஊர் அரண்மனையிலேதான் அகப்படும். அதற்கு ராஜாவின் உத்தரவு ஆகவேண்டும். நீங்கள் திங்கள் கிழமை வரையில் பொறுத்திருந்தால், சவாரிக் குதிரையொன்று சேகரித்துக்கொடுக்கிறேன்” என்றார்.