பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54 பூர்ணசந்திரோதயம்-2 அடித்துத் திருவாரூர்ப் பக்கமாக ஒட்டத் தொடங்கினார். அந்தக் காளை மாடுகள் குள்ளமாகவும், குண்டாகவும், பால் நிறமும் வழுவழுப்புமுள்ள தோற்றமுடையவையாகவும், ஆக்கிரோஷம், சுறுசுறுப்பு முதலியவை நிறைந்த யெளவனப் பருவத்து மயிலைக் காளைகளாகவும் இருந்தன. அவைகள் அதுவரையில் அடியையே பெற்று அறியாதவைகள். ஆகையால், அப்போது புதிதாகக் கிடைத்த அடிகளைப் பெறவே, அவைகள் அடக்க இயலாத வீராவேசமும் சீற்றமும், மனக் கொதிப்பும் கொண்டவையாய் நாற்கால் பாய்ச்சலில் பாய்ந்து வாயு வேக மனோவேகமாக ஓடத் தலைப்பட்டன. அவைகளினது கால்கள் பூமியில் படுவதே தெரியாது இருந்த மையால் அவைகள் ஆகாயத்தில் பறந்து செல்கின்றனவோ என்று வழிப்போக்கர் சந்தேகிக்கத் தக்கவையாய் இருந்தன. அந்த வண்டியிலிருந்த மனிதர் அடிக்கடி பின்புறம் திரும்பி மனிதர் வருகிறார்களோ என்று பார்த்துக் கொண்டும், ஷண்முகவடிவின் உடம்பு பின்பக்கத்தில் நழுவிப் போகாமல் ஒரு கையால் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டும், முன்புறத்தில்காளைகள் சரியான வழியில் ஒடுகின்றனவா என்று பார்த்துக் கொண்டும் அளவிறந்த ஊக்கமும் உற்சாகமும் தோற்றுவித்தவராய், எருதுகளை முடிக்கிச் செல்ல, கால் நாழிகை நேரத்தில் வண்டி திருவாரூர் போய்ச் சேர்ந்தது. அந்த ஊர் பெரிய பட்டணமாத லாலும், ஜனங்கள் அப்போதும் நடமாடிக் கொண்டிருந்தனர். ஆகையாலும், அவ்விடத்தில் அந்தப் பெண்மணிக்கு எவ்விதப் பொல்லாங்கும் நேராது என்று நினைத்த அந்த உபகாரி அவ்விடத்தில் காணப்பட்ட ஒரு வீட்டின் வாசலில் வண்டியை நிறுத்தி, இறங்கிப் பின்புறம் வந்து நின்று, ஷண்முகவடிவின் கைகால்களில் இருந்த கட்டுகளையெல்லாம் விலக்கியபின், பக்கத்தில் இருந்த வீட்டிற்குள் போய், ஒரு பாத்திரத்தில் நல்ல ஜலம் வாங்கிக் கொணர்ந்து அவளது வாயில் விடுவித்துப் பருகுவிக்க, அவள் சிறுகச் சிறுகத் தெளிவடைந்து விழித்துக் கொண்டாள்.