பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் '91 குணமும் ஒப்பற்ற பராக்கிரமும், நிகரற்ற அழகும், அவன் தன்னிடத்தில் வைத்துள்ள இணையற்ற வாஞ்சையும் பசுமரத்தாணிபோல அந்த இளந்தோகையினது மனதில் தாக்கி, அவளைப் பித்தமுறச் செய்து வந்தன. ஆனாலும், அவள் உத்தம ஜாதி ஸ்திரீயாகையால், தன் மனதின் சஞ்சலங்களையும் வேதனைகளையும் ஒருவாறு அடக்கிக் கொண்டவளாய் மகா ஏழையும் மனிதக் கட்டில்லாதவளும் ஆன தனக்கு அப்படிப்பட்டஉயர்வான மனிதருடைய சம்பந்தம் கிடைப்பது அசாத்தியமென்றும், தான் அதைப்பற்றி மனதால் நினைப்பதும் தவறு என்றும் எண்ணிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு தினமும் அவளது மனதில் எழுந்து பெருகி முதிர்ந்து கொண்டு போன காதல்தீயை அவள் அதுகாறும் இன்னதென்று அறியாமல், அதை அடக்கும் பொருட்டு பற்பல முயற்சிகள் செய்து வந்தது எல்லாம் வீணாயின. அன்றி அந்தக் காதலும் அபாரமாக விரிந்து தளிர்ந்து அடக்க இயலாததாக வதைத்துக் கொண்டிருந்தது. அந்த யெளவனப் புருஷனைக் காணும் போதெல்லாம் பூத உடம் போடு சுவர்க்கபோக அனுபவிக்கும் ஜீவன்முத்தன் போல ஆனந்த பரவசம் அடைந்தவளாய் மகாபரிதாபகரமானநிலைமையில் இருந்தாள். கலியாணசுந்தரம் என்ற மன்மத புருஷனுக்குத் தான் மனையாட்டியாகப் போவதைப் பற்றி அவள் அவ்வாறு ஆனந்த பரவசமுற்று உணர்வு கலங்கி மெய் மறந்து பைத்தியங் கொண்டவள்போல மாறி இருந்தாளானாலும், தனது ஆருயிர்ச் சகோதரியான கமலத்தை விட்டு தான் இனி எப்போதும் பிரிந்திருக்க நேருமோ என்ற கவலையும், அவள் கலியாணம் செய்துகொள்ளாது இருக்கையில் தான் மாத்திரம் முதலில் கலியாணம் செய்துகொள்ளுவதா என்ற விசனமும், தனது கலியாணத்திற்குள் அவள் ஒருவேளை வராமல் இருந்து விடுவாளோ என்ற அச்சமும் எழுந்து எழுந்து அவளது மனதில் நிறைந்திருந்த இன்ப சாகரத்தைக் கலக்கிக் கொண்டிருந்தன. வழக்கம் போல அன்றைய தினமும் அந்த மோகனாங்கன்