பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பூர்ணசந்திரோதயம்-3 லீலாவதி வெட்கிக் கீழே குனிந்துகொண்டவளாய், "அப்பா நான் எந்தப் புதிய விஷயத்தை வெளியிட்டாலும், அதனால் என் மானக்கேடும், இழிவும் அதிகரிக்குமே அன்றி, உங்களுடைய அபிப்பிராயத்தில் எனக்கு அதிக மதிப்பு உண்டாகப் போகிறதில்லை. இருந்தாலும், இனி எதையும் உங்களிடத்தில் மறைப்பது நியாயமல்ல. ஆரம்பத்தில் நான் அந்த மனிதரைக் கண்டபோது, என் மனம் அவர் விஷயத்தில் ஒருவிதமான பைத்தியம் கொண்டது. அவர் நம்முடைய யோக்கியதைக்குத் தகாத மனிதர் என்றும், அவருடைய சம்பந்தம் கூடாது என்றும் நீங்கள் எவ்வளவோ எடுத்துச் சொன்னீர்கள். அவைகளை எல்லாம் கேளாமல் நான் அவரையே கட்டிக்கொண்டேன். ஆனாலும், கொஞ்ச காலத்தில், அவருடைய உண்மையான அயோக்கியதையும் துர்க்குணமும் துர்நடத்தையும் நன்றாக வெளிப்பட்டு விட்டன. நான் அவரிடத்தில் வைத்த அளவற்ற பிரேமையும் வாத்ஸல்யமும் கலகலத்துச் சின்னாபின்னமாகி விட்டன. ஒவ்வொரு சமயத்தில் அவர் சொன்ன சொற்களாலும் செய்த கொடுமைகளாலும் என் மனம் அடியோடு மாறிப் போனது. ஆகையால், என்னுடைய பிரியமும் நாட்டமும் வேறொரு மனிதரின்மேல் சென்றுவிட்டன. கொஞ்ச காலத்தில் அந்தப் புதிய சிநேகம் முற்றிப்போய்விட்டது. கடைசியில் நான் என் புருஷர் விஷயத்தில் துரோகமான காரியம் செய்து விட்டேன். அதை என் புருஷர் கண்டுகொண்டார். அதைக் கருதித்தான் நான் அவரிடத்தில் இவ்வளவு தூரம் பயந்து அவர் சொல்லுகிறபடி நடந்து கொண்டு வரவேண்டியதாகிவிட்டது. அவர் என்னை எவ்வளவு இழிவாகவும் தூஷணையாகவும் கேவலமாகவும் நடத்தினாலும், என்னை அடித்தாலும், வைதாலும், நான் அவரை மீறி எதையும் செய்ய முடியாமல் போய்விட்டது. அந்த முகாந்திரத்தை வைத்துக்கொண்டுதான் அவரும் என்னைக் கேவலம் ஒரு நாய்போல நடத்தி வருகிறார்' எனறாள.