பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பூர்ணசந்திரோதயம்-3 அதைக் கேட்டவுடனே மாசிலாமணிப்பிள்ளை ஒருவாறு சஞ்சலமும் கலக்கமும் அடைந்தவராய் லீலாவதியை நோக்கினார். அவர்கள் இருவரும் வேலைக்காரர்களுக்கு எதிரில் ஏதாவது விஷயத்தைப் பற்றி ரகசியமாகப் பேச விரும்பினால், மகாராஷ்டிர பாஷையிலே பேசுவது வழக்கம். ஆகையால், அவர் தமது மனைவியை நோக்கி, 'என்ன லீலாவதி இந்த மனிதன் சொல்லி அனுப்பியிருக்கிற செய்தி நிஜமாயிருக்கும் என்று நீ நினைக்கிறாயா? நான் மைசூரில் இருந்த வரையில் வீட்டைவிட்டு வெளியிலேயே போகவில்லை. எனக்கு அறிமுகமான மனிதர் ஒருவர்கூட அங்கே இல்லை. அப்படியிருக்க அங்கே இருந்து ஒர் ஆளிடத்தில் கடிதம் கொடுத்து இவ்வளவு தூரத்திலுள்ள எனக்கு அனுப்பக்கூடிய சிநேகிதர் யார் இருக்கப் போகிறார்கள்? இந்த மனிதன் சொல்லுவது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது!’ என்றார். அதைக் கேட்டுச் சிறிதுநேரம் தத்தளித்த லீலாவதி மகாராஷ்டிர பாஷையிலேயே மறுமொழி சொல்லத் தொடங்கி, 'ஆம்; என் மனசிலும் அதே மாதிரியான சந்தேகம் தான் உண்டாகிறது. இந்தச் சமயத்தில் நாம் என்ன செய்கிறது என்பது என் புத்திக்குப் படவில்லை. இது ஏதாவது தந்திரமாக இருந்தாலும் இருக்கலாம். எதற்கும், இந்த மனிதரைப் பார்க்கலாமா? அல்லது, பார்க்கக் கூடாதா என்பதை எப்படி நிச்சயிக்கிறது?’ என்று முற்றிலும் குழப்பம் அடைந்தவள் போலப் பேசினாள். அதற்குள் ஒருவித முடிவிற்கு வந்த மாசிலாமணிப் பிள்ளை, “சரி; விஷயம் அபாயகரமானதாக இருந்தாலும், நாம் அதற்குப் பின் வாங்குவதில் உபயோகமில்லை. அவன் எதற்காக வந்திருக்கிறான் என்பதையும் அறிந்துவிடுவோம்' என்று கூறிய பிறகு அங்காளம்மாளை நோக்கி, ‘சரி; அவரை இங்கே அழைத்துக் கொண்டு வா" என்றார்.