பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

பூர்ணசந்திரோதயம்-3

உட்கார்ந்திருந்தான். அம்மாளுவையும் கலியாணசுந்தரத்தையும் தவிர, மற்ற எல்லோரும் புறப்பட்டு வெளியில் போய் விட்டனர். அதன் பிறகு கால் நாழிகை நேரம் கழிந்தது. அம்மாளு எழுந்து மறுபடியும் தன்னைப் புதுமாதிரியான ஆடை ஆபரணங்களினால் அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினாள். அவளுக்குச் சுமார் இருபது வயதிருக்கும் என்பதும், அவள் மகா வசீகரமான அழகுடைய அப்ஸர ஸ்திரீபோல இருந்தாள் என்பதும் முன்னரே சொல்லப்பட்ட விஷயம். அவளது உடம்பு மாசு மருவற்ற தந்தத் தகட்டினால் போர்த்தப்பெற்று பொன்மெருகு ஏற்றப் பெற்றது போல நிரம்பவும் தேஜோமயமாக விளங்கியது. கடலிலும் பெரிய கண்களென்று கவிகளால் சிறப்பித்துக் கூறப்பட்ட மகா அழகான அவளது அற்புத நயனங்களிரண்டிலும் அவள் அஞ்சன மை தீட்டிப் புருவ விற்களுக்கு ஜவ்வாதினால் மினுமினுப்பேற்றி, செஞ்சாந்து திலகம் அணிந்திருந்ததன்றி வாயில் வாசனைத் தாம்பூலம் அணிந்திருந்ததால், அவளது சிவந்த அதரங்கள் கனிந்து நைந்து இளகி அமிர்தரஸம் ஊற்றெடுத்த நிலைமையில் இருந்தன. அவளது அழகிய சிரத்தில் அபாரமாக வளர்ந்து செழித்திருந்த கருங்கூந்தலை அவள் அற்புதமாகப் பின்னித் தேருருளை போலப் பின்புறத்தில் உருட்டி விட்டு அதன்மேல் ரோஜா மலரையும் ஜாதி மலரையும் மிதமாக அணிந்திருந்தாள். ஆனாலும், அந்த அலங்காரம் தேவர்களும் கண்டு காமாந்தகாரங்கொண்டு நெடுமூச்செறியத்தக்க மகா விசேஷக் காட்சியாக இருந்தது. அவள் நல்ல பக்குவகாலத்துப் பெண்ணாதலால், அவளது முகம் முதல் நகம் வரையிலுள்ள ஒவ்வோர் அங்கமும் அதிகம் குறைவு என்ற எப்படிப்பட்ட ஏச்சுக்கும் இடமின்றி சாமுத்திரிகா லக்ஷணப்படி அமைந்து செழித்து அழகும் இனிமையும் முதிர்ந்து கனிந்து இன்பக் களஞ்சியமாக விளங்கியது. அவள் அணிந்திருந்த மேகவர்ணப்பட்டாடைகள் மகா துல்லியமான மெல்லிய பட்டும், ஜரிகைப் பூக்களும்