பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 91 அவ்வளவு தந்திரம் செய்தான்! அவனுடைய புத்தி எப்படிப்பட்ட துன்மார்க்கங்களில் செல்லுகிறது பார்த்தாயா? அடடா என்ன துர்ப்புத்தி என்னதுர்ப்புத்தி அதிருக்கட்டும். நீ கையெழுத்து வாங்கிய அடிக் காகிதத்தில் எழுதப்பட்டிருந்த விஷயம் என்ன?" என்றார். லீலாவதி அந்த விஷயத்தை வெளியிட நிரம்பவும் கிலேசம் அடைந்தவளாய் ச் சிறிது நேரம் தயங்கியபின், 'அது முழுமோசமான சங்கதி. இளவரசர் என்னுடைய கற்பை அழித்துவிட்டதாகவும், அதை என் புருஷர் நேரில் கண்டுபிடித்ததாகவும், அந்த விஷயத்தைக் கருதி இளவரசர் என் புருஷரிடத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், அதுவுமன்றி, என் புருஷர் செய்த கொலைக் குற்றத்தின் விஷயமாக, அவருக்கு எவ்விதத் தண்டனை கிடைப்பதாக இருந்தாலும், இளவரசர் தம்முடைய முடிவான அதிகாரத்தை உபயோகப்படுத்தி அந்தத் தண்டனையை ரத்து செய்து வைப்பதற்கு இணங்குவதாகவும், இளவரசர் அப்படிச் செய்யத் தவறினால், என் புருஷர் அந்தக் கடிதத்தை வெளிப்படுத்தி இளவரசரின் மேல் தாவா தொடரலாம் என்றும் இளவரசர் எழுதிக்கொடுத்ததுபோல அந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அதிலேதான் இளவரசருடைய கையெழுத்தும் முத்திரையும் வாங்கப்பட்டன, ' என்றாள். ஜெமீந்தார், 'ஓகோ அப்படியா சங்கதி. இப்போதுதான் உண்மை இன்னதென விளங்குகிறது. அதிருக்கட்டும். இளவரசரிடத்தில் மோசடியாகக் கையெழுத்து வாங்குவதற்காக அவரைப் பலவந்தப்படுத்திக் கொண்டு போக வேண்டியிருந்தது. என்னையும் கொண்டுபோய், என்னிட மிருந்த சொத்துக்களையெல்லாம் அபகரித்துக் கொண்டதன்றி, என்னுடைய தினசரி டைரிப் புஸ்தகத்திற்கும் பணம் கேட்க வேண்டிய காரணம் என்ன? அதுவும் உன் புருஷன் செய்த காரியமா? அல்லது. அவனுக்கு உதவியாக வந்த திருடர்கள் தாங்களாகவே செய்த காரியமா?' என்றார்.