பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 107 எடுத்து இங்கே வைத்தேன். அவ்வளவுதான் வரலாறு. இதைப் பார்த்து நீ ஏதாவது வித்தியாசமாக எண்ணிக்கொள்ளப் போகிறாய். நீ வேண்டுமானால் இதைப் பிரித்துப் படித்துப்பார். இது யார் எழுதியிருக்கலாம் என்பது ஒருவேளை உனக்குத் தெரியக்கூடும். ஆகையால், இந்தக் கடிதத்தை நீ பிரித்துப் படித்துப் பார்’ என்று நயமாக வற்புறுத்திக் கூறியவண்ணம் கடிதத்தை அவளுக்கு எதிரில் வைத்தான்.

அவள் அந்தக் கடிதத்ததை எடுக்கவும் படிக்கவும் அவ்வளவாக ஆவல் கொள்ளாதவள் போலக் காணப்பட்டு, உள்ளடக்கிய மகிழ்ச்சியும் புன்னகையும் தோற்றுவித்த முகத்தினளாய் அவனை நோக்கி, ‘இந்த உறைக்குள் என்னென்ன பொருள்கள் இருக்கின்றனவென்பது எனக்கு நன்றாகத் தெரியும். இதற்குள் இருக்கும் துண்டுக் காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் சங்கதியும் இன்னதென்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆகையால், நான் இதை எடுத்துப் பிரித்துப் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை என்றாள்.

அவளுக்கு அந்தக் கடிதத்தைப் பற்றிய வரலாறு எதுவும் தெரிந்திருக்காது என்று அவன் எண்ணியிருந்தவன் ஆகையால், அவள் சொன்ன மறுமொழி அவனால் சிறிதும் எதிர்பார்க்கப் படாததாக இருந்தது. அவன் அளவற்ற வியப்பும் திகைப்பும் அடைந்து, அவளுக்கு அந்த விஷயம் எப்படித் தெரிந்திருக்கலாம் என்று பெரிதும் சந்தேகம்கொண்டு, ‘என்ன ஆச்சரியம்! இந்தக் கடிதத்தைப் பற்றிய சகலமான வரலாறும் உனக்குத் தெரிந்திருக்கிறதே! இது ரகசியமாக வந்திருப்பதால், உனக்கு இது தெரிந்திருக்காது என்றல்லவா நினைத்தேன்! உனக்கு எல்லா விவரமும் தெரிந்திருப்பதும் நல்லதாயிற்று. இதன் சங்கதி ஒன்றையும் தெரிந்துகொள்ள மாட்டாமல் நேற்று முதல் நான் நிரம்பவும் சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகையால், நீ இதன் உண்மையை வெளியிடுவாயானால் அதைக் கேட்டு என்னுடைய மனம் நிம்மதியடையும் என்றான்.