பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பூர்ணசந்திரோதயம்-4 அதைக்கேட்ட தாதி நிரம்பவும் அன்பாகவும் பணிவாகவும் பேசத்தொடங்கி, “ஐயா! இந்தக் கடிதத்தைப் பற்றி இனி நீங்கள் எவ்வித அச்சமும் கொள்ளவேண்டாம். இதை நேற்றைய தினம் உங்களிடம் கொடுக்கும் பொருட்டு நான்தான் எடுத்து வந்தேன். கமிஷனர் கைதிகளையெல்லாம் பார்த்துக்கொண்டு வருவதாக பாராக்காரன் சொன்னான். அதைக் கேட்டவுடனே எனக்கு நிரம்பவும் பயம் உண்டாகிவிட்டது. என்கையில் கடிதம் இருந்தால் அதை அவர் ஒருவேளை கண்டுபிடித்து விடுவாரோ என்ற எண்ணத்தினால் நான் இதை ஜன்னலின் வழியாக உள்ளே போட்டுவிட்டுவிசையாக அப்பால் போய்விட்டேன். ஆனால், என் மனசில் மாத்திரம் ஒருவிதமான கவலை இருந்து வந்தது. ஜன்னலின் வழியாக உள்ளே விழுந்த இந்தக் கடிதத்தை நீங்கள் ஒருவேளை கவனிக்காமல் இருந்துவிடப் போகிறீர்களே என்றும், போலீஸ் கமிஷனர் உள்ளே வந்து கடிதத்தை எடுத்துப் பார்த்துவிடப் போகிறாரே என்றும் நான் நிரம்பவும் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தேன். போலீஸ் கமிஷனர் இங்கே வந்து உங்களிடத்தில் பேசிவிட்டு வெளியில் வருகிறவரையில் என் உயிர் என் உடம்பில் இருக்கவே இல்லை. அவர் வெளியில் வந்து பாராக்காரனிடம் கடிதத்தைப் பற்றிய பிரஸ்தாபமும் எதுவும் செய்யாமல் போனபிறகு தான் கடிதத்தை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் என்று நான் நிச்சயப்படுத்திக் கொண்டேன்’ என்றாள்.

அதைக்கேட்ட கலியாணசுந்தரம் முன்னிலும் அதிகரித்த வியப்பும் கலக்கமும் கொண்டு, “ஓ அப்படியா சங்கதி! இந்தக் கடிதத்தை கொண்டு வந்து நீயா உள்ளே போட்டாய் சரி; இதை யார் எழுதி உன்னிடம் கொடுத்தது? அவர்களுக்கு என் விஷயத்தில் இவ்வளவு தூரம் கருணை பிறக்கக் காரணம் என்ன? என்னை அவர்கள் எப்படி விடுவிக்கப் போகிறார்கள்? இதற்கு முன் நான் அடைபட்டிருந்த அறைக்கு ஒரு பெண் பிள்ளை வந்து பெருக்கிவிட்டுப் போவது வழக்கம். அவளும்