பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பூர்ணசந்திரோதயம்-4 ஆனால், அவன் இருந்த பெட்டி வண்டி ஊரைவிட்டு வெளியில் நெடுந்துரம் போகப்போக அதற்குமேல் வேறே வண்டிகள் காணப்படவில்லை; அவன் இருந்த வண்டி ஒன்றே தனிமையில் போய்க் கொண்டிருந்தது. கலியாண சுந்தரம் பெட்டி வண்டிக் கதவிலும் ஜன்னல்களிலும் இருந்த இடைவெளியால் அடிக்கடி பின்பக்கம் பார்த்துக்கொண்டே இருந்தான். ஏனென்றால், அவனது மனதில் இன்னதென்று சொல்ல முடியாத ஒருவித நம்பிக்கையும் மனஎழுச்சியும் தோன்றி அவனை ஊக்கிக் கொண்டே இருந்தன. ஏதோ தந்திரம் செய்து தன்னை விடுவிப்பதாக எழுதியிருந்த வெளியிலிருந்த மனிதர்கள் ஒருவேளை அந்த வண்டிக்குப்பின்னால் வருவார்களோ என்று அவன் எதிர்பார்த்தே அவ்வாறு கவனித்தவனாய் நிரம்பவும் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தான். தஞ்சையிலிருந்து வந்திருப்ப தாகச் சொன்ன தனது நண்பர்கள்தன்னை அந்தச் சந்தர்ப்பத்தில் விடுவிக்காவிடில், அதன்பிறகு அவர்கள்தன்னை விடுவிப்பதும் சாத்தியமற்ற விஷயம் என்று அவன் எண்ணிக் கொண்டு பின்புறத்தில் வைத்த விழியையும் கவனத்தையும் மாற்றாமல், ததேவத் தியானமாக வீற்றிருந்தான். அந்த இரவு நிரம்பவும் ரமணியமாகவும் பிரகாசமும் உடையதாகவும் இருந்தது. பனி மிதமாக நிறைந்து குளிர்ச்சியும் இன்பமும் கொடுத்துக் கொண்டிருந்தது. ஒரே பசுமையாக விரிந்திருந்த ஆகாயப் பரப்பில் தேவாமிர்தமே ஒன்றாகத் திரண்டு நின்று பிரகாசிக்கிறதோ என்று சந்தேகிக்குமாறு சந்திரன் நிகரற்ற எழிலோடு இயங்கியதும், எண்ணிறந்த தாரகைகள் அதைச் சூழ்ந்து நின்றதும் மண்டலேசுவரியான ஒரு சக்கரவர்த்தினி கோடிக்கணக்கான சேடிமார்கள் புடைசூழக் கொலு வீற்றிருப்பது போல, நிரம்பவும் நேத்திராநந்தமான இன்பக் காட்சியாக இருந்தன. இரு பக்கங்களிலிருந்த மரங்களின் இலைகளை அசைக்காமல் மெதுவாக வீசிய மந்தமாருதம் மனிதர், விலங்குகள், பறவைகள், பூச்சி, புழுக்கள் முதலிய சகலமான ஜீவராசிகளையும் ஆனந்த சாகரத்தில் ஆழ்த்தியது.