பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 133 கொண்டிருந்தது. ஆனால், எவ்விடத்திலும் மனிதரது வாசஸ்தலமாவது மனிதர் பழகும் குறிப்பாவது காணப்படவே இல்லை. அந்தப் பயங்கரமான பொட்டல் வெளியைக் கடந்து தாங்கள் அப்பால் போகுமுன் தனது நண்பர்கள் தன்னை விடுவிக்க ஏதாவது ஏற்பாடு செய்யலாம் என்ற ஒர் எண்ணம் கலியாணசுந்தரத்தின் மனதில் உதித்துக் கொண்டே இருந்தது. அப்படி அவர்கள் வந்து ஏதேனும் முயற்சி செய்வார்களானால், தானும் அவர்களுக்கு அனுகூலமாக இருந்து உதவி செய்ய வேண்டும் என்ற யோசனை அவனது மனதில் தோன்றியது. ஆகையால், அவன் உட்புறத்திலிருந்த பிரகாசத்தின் உதவியால் கபடமாகப் பார்த்து போலீஸ் சிப்பந்திகளுள் முக்கியமானவன் வைத்திருந்த இரண்டு பிஸ்டல்களையும் கவனித்து அவன் அவைகளை எவ்வாறு சொருகி வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை நன்றாக ஆராய்ச்சி செய்துகொண்டான்.

அவர்கள் இருந்த பெட்டிவண்டி அம்பு பாய்வதுபோல நிரம்பவும் விசையாகச் சென்று கொண்டிருந்தது. அந்த வண்டியின் நிழல் அதன் வலது பக்கத்தில் தரையில் படிந்து நன்றாகத் தெரிந்தது ஆகையால், அதைக் கவனித்த கலியாண சுந்தரம், வண்டியின் மேல் இரண்டே இரண்டு காசாரிகளைத் தவிர, வேறே சிப்பாயிகள் யாரும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டான். ஆகையால், தனது நண்பர்கள், வண்டிக்குள் இருக்கும் இரண்டு போலீஸ் சிப்பந்திகளை மாத்திரம் அடக்கி விடுவார்களானால், தான் எளிதில் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான். போலீசார்அதிக பந்தோபஸ்தோடு வராமல் இருந்ததிலிருந்து, தனக்கு உதவி செய்த தாதி தங்களது ரகசியம் எதையும் போலீசாரிடம் வெளியிட வில்லை என்றும், தனது நண்பர்கள் தன்னை விடுவிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பதைப் போலீசார் சிறிதும் சந்தேகிக்கவில்லை என்றும், கலியாணசுந்தரம் யூகித்துக் கொண்டான்.