பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 171 இனி வரும் ஜென்மங்களிலும் நாம் அடையும் பெருமைக்கும் நன்மைகளுக்கும் விதைபோடுவது போன்றது. இந்த விஷய மெல்லாம் மகாராஜாவுக்குத் தெரியாததல்ல. நான் மகா அறிவாளிபோல இதையெல்லாம் எடுத்து விஸ்தாரமாகச் சொல்வதும் அதிகப் பிரசங்கமாகுமே ஒழிய வேறல்ல. ஆகையால், மகாராஜா அவர்கள் என்னை இவ்வளவோடு விலக்கி இவ்விடத்தை விட்டுப்போய்விட அனுமதி கொடுக்க வேண்டுமாய் நான் நிரம் பவும் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். நான் தங்களுடைய பொற்பாத கமலங்களில் ஆயிரம் தரம் தெண்டனிட்டு வேண்டிக் கொள்ளுகிறேன். ஏதோ மதிமயங்கி நான் என்னுடைய இடத்தைவிட்டு இங்கே வந்து இவ்வளவு காலம் இருந்து மகாராஜாவின் மனசில் ஒருவித நம்பிக்கையை உண்டாக்கி மனோ வேதனைக்கு ஆளாக்கி விட்டேன். தெரியாத்தனத்தினால் நான் செய்த தவறுகளை எல்லாம் மகாராஜா கூடிமித்துக் கொள்ள வேண்டும். இங்கே வந்தவுடனே அந்தக் கருடபுராணத்தை நான் வாசித்திருந்தால், உடனே இவ்விடத்தை விட்டுப் போகத் தீர்மானித்து எஜமானரிடம் அனுமதி கேட்டிருப்பேன். இவ்வளவு காலம் இருந்து விட்டு இப்போது என் மன மாறுபாட்டை எப்படி வெளியிடுவதென்று நினைத்து அஞ்சி நான் இந்த இரண்டு மூன்று நாட்களாய் எப்படி இதைத் தங்களிடம் வெளியிடுவது என்பதை அறியாமல் சிந்தித்திருந்தேன். இப்போது தாங்களே வந்து மேல் நடக்க வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பிரஸ்தாபிக்கிறபடியால் நான் துணிந்து விஷயத்தை வெளியிடுவது கட்டாயமாயிற்று. ஆகையால், மகாப் பிரபுவாகிய எஜமானர் எப்படியாவது இந்த ஏழையின் உறுதியான கொள்கை நிறைவேறும்படி செய்ய வேண்டுமாய் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன்’ என்று கல்லும் கரைந்துருகும் வண்ணம் கனிவாகவும் மாதுரியமாகவும் உருக்கமாகவும் பலவித வசீகர அபிநயங்களோடும் கூறினாள்.