பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 293 சஞ்சலத்தில் ஆழ்ந்தவளாயிருக்க, கட்டாரித்தேவன் அவளைத் தூக்கிக் கொண்டு அந்த வீட்டிற்குள் நுழைந்தான்; உடனே வெளிக்கதவு மூடி உட்புறம் தாளிடப் பெற்ற ஒசைசடேரென்று கேட்டது. அந்த ஒசை லீலாவதியின் புண்பட்ட இதயத்தில் போய் ஈட்டியால் குத்துவதுபோலத் தாக்கியது. அவளது உயிர் ஊசலாடத் தொடங்கியது. அன்றோடு தனது உயிர் போவது நிச்சயம் என்ற உறுதி அவளது மனதில் தோன்றத் தோன்ற, அவளது மனோதிடமும் நம்பிக்கையும் அடியோடு கைவிட்டுப் போயின. அவளது வாயில் திணிக்கப்பட்டிருந்த துணி அவள் மூச்சு ஒழுங்காக விடமாட்டாமல் தடுத்துக் கொண்டிருந்தது. ஆகையால், மூச்சு திணறித் திக்குமுக்கலாடிக் கொண்டிருந்தது. கை கால்கள் எல்லாம் இறுகக் கட்டப்பட்டிருந்தன ஆதலால், அங்கங்கே, இரத்தம் தேங்கி மரத்துப்போய் விண்விண்ணென்று தெறித்துக் கொண்டிருந்தது. அவ்வாறு லீலாவதி மரணவேதனை அனுபவித்தவளாய் இருந்த சமயத்தில், கட்டாரித்தேவன் அவளை இரண்டாங் கட்டிற்குள் கொண்டுபோய் அவ்விடத்தி லிருந்த கூடத்தில் இறக்கிவிட்டு, ‘பாட்டி விளக்கைப் பொருத்து’ என்று கூறினான். உடனே ஒரு சிறிய விளக்கு பிரகாசித்தது. இருளே மயமாக இருந்த இந்த இடமும் அங்கிருந்த பொருட்களும் உடனே ஸ்பஷ்டமாகத் தெரிந்தன. அந்த இடம் நிரம்பவும் விஸ்தாரமானதாகக் காணப்பட்டது. ஆனாலும், ஏராளமான தட்டுமுட்டு சாமான்களும், கட்டை முட்டைகளும், தொம்பைக் கூண்டுகளும், ஆடுகளும், விசிப் பலகையும் சட்டிப் பானைகளும், மொந்தைகள் நிறைந்த உறிகளும், கயிற்று வடங்களும், இன்னம் விவரிக்க இயலாத எண்ணிறந்த சாமான்களும் நிறைந்து மூச்சுவிடவும் இடமில்லாதபடி அடைத்துக் கொண்டிருந்தன. லீலாவதி நாற் புறங்களிலும் சுற்றிப் பார்த்துப் பிரமிப்படைந்தாள். ஏனென்றால், தன்னைத் தூக்கிக் கொண்டு வந்த மனிதன் அப்போது அவ்விடத்தில் காணப்படவில்லை. அவளுக்கருகில் சிறிது தூரத்தில் ஒரு கிழவி மாத்திரம் நின்று கொண்டிருந்தாள்.