பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 49 இரத்தம் அங்கங்கு தங்கிப் போகவே உடம்பு முழுதும் மரத்துப் போய்விட்டது. மயக்கமும் கிருகிருப்பும் தோன்றி அவளது சிரத்தை அசைக்கத் தொடங்கியது. மூளை கலங்கியது. அறிவு பிறழ்ந்து இருளடைய ஆரம்பித்தது. மூச்சு திணறிப் போய்விட்டது. “ஐயோ! தெய்வமே உயிர்போகிறதே! இந்த அக்கிரமத்தைக் கேட்பார் இல்லையா? ஈசுவரா! கண்கள் இருளுகிறதே! உயிர் துடிக்கிறதே! உடம் பெல்லாம் நெருப்பாய்ப் பற்றி எரிகிறதே! இது என்ன கொடுமையோ தெரியவில்லையே! ஒரு நாற்காலியில் இப்படிப்பட்ட விசைகளும் இருக்குமோ என்ன கருத்தோடு இந்த மோசக் கருத்தான விசையைத் தயாரித்தார்களோ தெரியவில்லை! நான் யாருக்கு என்ன குற்றம் செய்தேன் என்பது எனக்கே தெரியவில்லை என்னை இப்படிப்பட்ட மரண வேதனைக்கு ஏன் ஆளாக்குகிறார்களோ தெரிய வில்லையே! என் உயிர் போகுமுன் நான் என் அக்காளைப் பார்ப்பேனோ இல்லையோ தெரியவில்லையே! நான் இறந்து போனபிறகு, என் அத்தையை யார் காப்பாற்றப் போகிறார்கள்! நான் இறந்து போய் விட்டேன் என்பது என் அக்காளுக்குத் தெரிந்தாலாவது, அவள் அத்தையைக் காப்பாற்றுவாளே. அவளுக்கு என்னுடைய வரலாறெல்லாம் தெரியாமல் போய் விடுமோ என்னவோ தெரியவில்லையே! ஐயோ தெய்வமே பரமதயாளுவும் நீதிவானுமான உன்னுடைய ராஜ்ஜிய பரிபாலனத்தில், ஏழை எளியவர்களை நிராதரவாகவா விட்டுவிட்டாய் ஆகா! என்ன செய்வேன்? என்று வாய்விட்டுப் பலவாறு பிரலாபித்துருகித் தன்னை விடுவித்துக் கொள்ள முயன்று தனது கைகளையும் கால்களையும் உடம்பையும் அசைத்து உலுக்கித் திமிரித் தத்தளித்து நெருப்பின் மேல் விழுந்து புரண்டு புரண்டுதுவளும் புழுவைப்போலத் துடிதுடித்திருந்த தருணத்தில் யாரோமனிதர் சந்தடி செய்யாமல் மெதுவாக நடந்து தான் இருந்த இடத்தண்டை நெருங்கி வருவதாக அவளுக்குத் தோன்றியது. உடனே அவள் திடுக்கிட்டுப் பெரிதும் கிலி கொண்டாள்.