பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 117

பண்டாரம் அபாரமான திகிலும் கலவரமும் அடைந்து தமது கைகளைப் பிசைந்துகொண்டு தத்தளித்தவராய்க் கிழவியை நோக்கி, ‘இது தருமசங்கடமாகவல்லவா முடிந்துவிட்டது. இப்போது நாம் என்ன செய்கிறதென்பது தெரியவில்லையே. இவள் இறந்துபோயிருந்தாலும், அதனால் நமக்குப் பெரிய தீங்கு சம்பவிக்கும். அல்லது, இவள் மூர்ச்சித்திருந்து தெளிந்து எழுந்தாலும், இவள் என்னுடைய உத்தேசத்துக்கு இனி கொஞ்சமும் பயன்படாமல் போவதோடு, இங்கே நடந்த விஷயங்களையெல்லாம் பகிரங்கப்படுத்துவாள். அதன்பிறகு நாம் இந்த மடத்தில் இருக்கமுடியாது. முன்னே இருந்த இடத்தைவிட்டு நான் ஓடிவந்ததற்கு இவளே ஆதாரபூதமாக இருந்தாள். அதுபோல, இப்போதும் நான் இவளால் இந்த இடத்தைவிட்டு ஒடிப்போக நேரும். இந்த இடத்தில் நமக்குச் சகலமான செளகரியங்களும் வசதிகளும் இருக்கின்றன. இதைவிட்டு நாம் போனால், இவ்வளவு சுகமான இடம் இனி நமக்குக் கிடைக்குமென்பது நிச்சயமில்லை. இந்தத் தரும சங்கடத்தில் நாம் என்ன செய்கிறதென்பது தெரியவில்லையே’

என்று கூறித் தவிக்கலானார்.

அதைக்கேட்ட கிழவி, “நீங்கள் சொல்வது உண்மைதான். இவளுக்கு நாம் சிகிச்சை செய்து தெளிவிப்பது, நாமே நம்முடைய துன்பத்திற்கு விதை போடுவதுபோல ஆகும். ஆகையால், நாம் இவளுக்கு உயிருண்டாக்க முயற்சிப்பது சரியல்ல. இவளை நாம் இப்படியே விட்டுவிடுவோம். இனி இவள் பிழைக்கமாட்டாள். நாளைய தினம் நாம் ஏதாவது ஒரு கட்டுக்கதை சொல்லி இவளுடைய பிணத்தைக் கொளுத்திவிட ஏற்பாடுசெய்வோம்’ என்றாள்.

பண்டாரம் சிறிது யோசனை செய்து, “நீ சொல்வது யுக்தமான காரியமாகத் தோன்றவில்லை. இன்னும் இரண்டொரு நாழிகை நேரத்தில் இவள் ஒருவேளை மூர்ச்சை தெளிந்து எழுந்தாலும் எழுந்திருக்கலாம். அதன்பிறகு இவளை நாம் என்ன