பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 171 கட்டப்பட்ட உன்னதமான கட்டிடமாக இருந்தது. அதைப் பார்த்த நீலமேகம் பிள்ளையின் மனதில் பல விதமான சந்தேகங்களும் கவலைகளும் எண்ணங்களும் உண்டாயின. அவ்வளவு சிறப்பான பெரிய மாளிகையில் உள்ளோர்கமலத்தை ஏமாற்றி இருப்பார்களா என்ற ஐயமே முக்கியமாக அவரது மனதில் குடிகொண்டது. வண்டி அந்த மாளிகையின் வாசலில் நின்றவுடனே நீலமேகம் பிள்ளை, ‘கருப்பாயி! இதுதான் 13வது இலக்கமுள்ள வீடு; கீழே இறங்கு; உள்ளே போய் விசாரிப்போம்’ என்றார். அதைக்கேட்ட கருப்பாயி வண்டியை விட்டுக் கீழே இறங்கி அந்த மாளிகையின் பக்கம் திரும்பி அதைப் பார்த்தவுடனே திடுக்கிட்டு ஆச்சரியமுற்றவளாய், “ஐயா! இதற்கு முன்பு நான் பார்த்த வீடு மாதிரி இருக்கிறதே. ஆம், ஆம். நான் இந்த வீட்டில்தான் நோயாகப்படுத்திருந்தேன். கோலாப்பூரிலிருந்து எங்களை அழைத்து வந்த அம்மாளுடைய வீடு இதுதான். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது’ என்றாள்.

அதைக் கேட்ட நீலமேகம் பிள்ளை மிகுந்த கலக்கமும் குழப்பமும் அடைந்து, ‘நீ சொல்வதைப் பார்த்தால், சோமசுந்தரம் பிள்ளை என்பவரின் வீடு இதுவல்ல என்று ஆகிறதே. கமலத்தம்மாள் வேறே இடத்தில் இருப்பதாகவும், அங்கே கொண்டுபோய் விடுவதாகவும் சொல்லித் தானே இந்த வீட்டு அம்மாள் ஷண்முகவடிவை அழைத்துக் கொண்டு போவதாகச் சொன்னாய்?” என்றார்.

கருப்பாயி, ‘ஆம் அப்படித்தான் சொல்லிஅழைத்துக் கொண்டு போனார்கள்’ என்றாள்.

நீலமேகம்பிள்ளை, ‘அப்படியானால் நீ வீட்டு இலக்கத்தை ஒன்றுக்கொன்று மாறாட்டமாகச் சொல்லுகிறாய்? சக்கா நாயக்கர் தெரு 13வது வீடு உங்களை அழைத்துவந்த அம்மாளுடைய விலாசமாயிருக்க, அதை நீ கமலம் இருக்கும் வீட்டின் விலாசம் என்று தவறுதலாக அர்த்தம் செய்து கொண்டிருக்கிறாய் போலிருக்கிறது” என்றார்.