பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 177 நிச்சயிக்க மாட் டாமல் அவரது மனம் பலவகையில் சந்தேகப்பட்டது. ஆனாலும், கருப்பாயி சொல்வது முற்றிலும் தவறாக இராதென்ற ஓர்உறுதிமாத்திரம் புலப்பட்டுக் கொண்டு வந்தது. தாம் திருவாரூருக்குப் போயிருந்த காலத்திலேயே, ஷண்முகவடிவின் வேலைக்காரி, கருப்பாயி, சிவபாக்கியம் ஆகிய மூவரும் கமலம் சக்காநாயக்கர்தெரு 13வது இலக்கமுள்ள வீட்டிலிருக்கிறாள் என்றும், ஷண்முகவடிவு அந்த விலாசத்திற்குப் பல தடவைகளில் கடிதம் அனுப்பி மறுமொழி பெற்றாள் என்றும் சொன்னது நன்றாக நினைவிருந்தது. தாம் போய்ப் பார்த்தது 13வது இலக்கமுள்ள வீடே என்பதும், அந்த வீட்டின் சொந்தக்காரி அம்மணிபாயி என்பதும் அவருக்குச் சந்தேகமறத் தெரிந்தன. ஆனால், இன்னொரு விஷயம் மாத்திரம் அவரது மனதைப் பெரிதும் கலவரத்திற்கு உள்ளாக்கியது. ஷண்முகவடிவும், கருப்பாயியும் அம்மணிபாயியின் வீட்டிற்கு வந்திருந்த காலத்தில், அம்மணிபாயி சக்காநாயக்கர் தெரு 13வது இலக்கமுள்ள சோமசுந்தரம் பிள்ளையின் வீட்டிலிருக்கும் கமலத்தினிடம் அழைத்துக்கொண்டு போவதாகச் சொல்லி ஷண்முகவடிவை எங்கே அழைத்துக் கொண்டு போயிருப்பாள் என்ற சந்தேகமே பலமாக எழுந்து அவரது மனதை சஞ்சலப் படுத்தியது. முடிவில், கமலமும், ஷண்முகவடிவும் ஏதோ ஒரு வஞ்சகச் சூழ்ச்சியில் அகப்பட்டிருக்க வேண்டுமென்றும், அதில் அம்மணிபாயி சம்பந்தப்பட்டிருக்க வேண்டுமென்றும் ஒர் எண்ணம் அவரது மனதில் உதித்தது. தாம் எப்பாடுபட்டாவது அதன் உண்மையை அறிந்துகொண்டு தமது தங்கைமார்களைத் தமது வசப்படுத்தி கண்ணியமான நல்ல நிலைமையில் வைக்க வேண்டுமென்று அவர் உறுதியான தீர்மானம் செய்து கொண்டார். அந்தச் சமயத்தில் அந்த ஊர் போலீஸ் இன்ஸ்பெக்டரைப் பற்றிய நினைவு அவருக்கு உண்டாயிற்று. தமது தந்தையின் பிரேதத்திலிருந்து உயிலை எடுத்துக் கொடுத்தவர் போலீஸ் இன்ஸ்பெக்டரே ஆதலால், அந்த உயிலில் முக்கியமான பல விஷயங்களைப் படித்த காலத்தில்,