பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 237 தான் இளவரசன். இன்னம் சொற்பகாலத்தில் நான் இந்தத் தேசத்து மகாராஜனாகக் கூடியவன். இப்போதும் பெயருக்கு மாத்திரம் என் தகப்பனார் மகாராஜனே அன்றி, அவருடைய செல்வாக்கு அதிகாரம் முதலிய எல்லாம் எனக் கே வந்து விட்டன என்றார்.

ஷண்முகவடிவு நிரம்பவும் பணிவாகவும் மிருதுவாகவும் பேசத் தொடங்கி, ‘மகாராஜா என் மேலிருக்கும் வைர ஆபரணங்கள் பட்டாடைகள் முதலியவைகளைக்கொண்டு தாங்கள் என்னை மதிக்கக் கூடாது; நான் பரம ஏழை, பதிவிரதா தர்மப்படி நடக்கும் குணமுடைய குடும்ப ஸ்திரீ நான் இருப்பது திருவாரூர். ஒரு காரியமாக இந்த ஊருக்கு வந்த இடத்தில், எனக்குப் பல அபாயங்கள் நேர்ந்தன. முடிவில் நான் நெருப்பினால் சுடப்பட்டு அபாயகரமானநிலைமையில் இருந்த காலத்தில் ஹேமாபாயி அம்மாள் என்னை எடுத்துக் காப்பாற்றினார்கள். ஆனால், அவர்கள் கடைசிவரையில் கபடமற்றவர்கள் போலவே இருந்து இந்த ஆடை ஆபரணங்களை அணிவித்து என்னை மோசடியாக இங்கே கொண்டுவந்து விட்டுப் போயிருக்கிறார்கள். நான் இன்னொருவரைக் கல்யாணம் செய்துகொள்வதென்று ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நிர்ணயத்திலிருந்து நான் தவறி நடக்கக் கூடியவளல்ல. தாங்கள் என் விஷயத்தில் ஏதோ வித்தியாசமான எண்ணம் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நான் ஒழுங்கான மார்க்கத்தில் நடக்கக்கூடிய குலஸ்திரீ. ஆகையாலும், எனக்குத் தெரியாமல் வஞ்சகமாக இவர்கள் என்னை இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். ஆகையாலும், தாங்கள் என் மேல் கொண்டுள்ள எண்ணத்தைமாற்றி என்மேல் கிருபை பாலித்து, என்னை அரண்மனைக்கு வெளியில் கொண்டுபோய் விட்டு விடச் செய்யவேண்டுமென நான் தங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்ளுகிறேன்’ என்று நிரம்பவும் வணக்க ஒடுக்கத்தோடு கூறினாள்.'