பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 253 தருணத்தல் தடுத்துக் காலஹரணம் செய்யும் அவ்வளவுதுணிவு வாய்ந்த மனிதன் யாராயிருப்பான் என்ற வியப்பும், பெருங் கோபமும் அவரது மனதில் பொங்கி எழுந்தன. தாம் நிரம்பவும் மங்களகரமாக நடத்த யத்தனித்த மகா முக்கியமான மாங்கலியதாரணச்சடங்கு நடைபெறாமல் யாரோஒரு மனிதன் அபசகுனம் போலக் குறுக்கிட்டுத் தடுத்ததைக் காண அவரது இரத்தம் கொதித்தது. கைகால்களெல்லாம் துடிதுடித்தன. கண்களில் தீப்பொறி பறந்தன. மீசைகள் துடித்தன; அந்தத் தேசத்திலுள்ள சர்வ ஜனங்களும் கீழ்ப் படிந்து வணங்கிப் போற்றத்தக்க மண்டலேசுவரரான தாம் மங்களகரமான ஒரு காரியம் செய்கையில் அதற்கு இடையூறு செய்யத் துணிந்தவன் உண்மையில் பைத்தியம் கொண்டவனாகத் தான் இருக்க வேண்டுமென்ற நினைவும், அவனைப் பாராக்காரர்கள் ஏன் உள்ளே விட்டார்கள் என்ற ஆத்திரமும், அவன் யாராக இருந்தாலும் அவனைத் தாம் தக்கபடி தண்டிக்க வேண்டு மென்ற மனக்கொதிப்பும் எழுந்து இளவரசரை நிலைகுலையச் செய்தன.

அவ்வாறு கூக்குரலிட்டு எல்லோரது கவனத்தையும் ஒரு நொடியில் கவர்ந்த மனிதன் நமது கலியாணசுந்தரம் என்பதை வாசகர்கள் எளிதில் யூகித்துக்கொண்டிருப்பார்கள். ஆதலால், அதை நாம் சொல்வது மிகையாகும். அவன் அம்மணிபாயியின் வீட்டை அடைந்து பார்த்து, அதன் கதவு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அண்டை வீட்டுக்காரனோடு பேசி முக்கியமான சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு அரண்மனைக்கு ஓடி வந்தான் என்பது முன்னரே சொல்லப்பட்டதல்லவா; அவ்வாறு ஓடிவந்தவன் கும் பலோடு கும் பலாக உள்ளே நுழைந்து ஜனங்களிருந்த இடத்தை அடைந்த காலத்தில் இளவரசர் திருமாங்கலியத்தைக் கையில் எடுத்தார். ஆதலால், அவன் சடேரென்று படைகளின் அணிவகுப்பிற்குள் நுழைந்து கொலு மண்டபத்தில் ஏறி முன் கூறப்பட்டபடி கூக்குரலிட்டான்.