பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பூர்ணசந்திரோதயம் - 5 பாய்ந்து தம்மைத் தூக்கிக்கொண்டு வந்து விசை வைத்த நாற்காலியில் போட்டு மாட்டியதும் சொப்பனக் காட்சிபோல வெகுதுரிதத்தில் நிகழ்ந்தன. ஆதலால், அதுவரையில் மெளனம் சாதித்த ஜெமீன்தார் அவன் தம்மை நாற்காலியில் மாட்டியதி லிருந்து, அவன் தம்மை உடனே கொல்ல உத்தேசிக்க வில்லை யென்று யூகித்துக் கொண்டார். ஆனாலும், தாம் அந்த நாற்காலி யில் இருக்கையில் தமக்கு அவன் ஏதேனும் தீங்கு இழைப்பானோஎன்றும், அநாதையாகக் கிடக்கும் லீலாவதியை அவன் எவ்விதமான கொடுமைக்கு உள்படுத்துவானோ என்றும் சந்தேகித்துப் பெரிதும் அச்சம்கொண்டு, நிரம்பவும் இறைஞ்சிய பார்வையாக அவனது முகத்தை உற்று நோக்கினார். அந்த இடத்தில் அற்பபிரகாசமுடைய ஒருவிளக்கு மாத்திரம் எரிந்து கொண்டிருந்தது. அதன் மங்கலான வெளிச்சத்தில், கட்டாரித் தேவனுடைய முகத்தின் விகாரத் தோற்றம் பன்மடங்கு அதிகரித்துப் பரம விகாரமாகத் தோன்றியது. தான், அவரது சதியாலோசனை பலிதமடையாமல் செய்துவிட்டதைப் பற்றி அபாரமான களிப்பும், தான் எப்படியும் பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்ற ஆக்ரோஷமும் அவன் கொண்டிருந்ததை அவனது முகம் நன்றாகக் காண்பித்தது. தாம் இறைஞ்சிய பார்வையாக அவனைப் பார்க்கப் பார்க்க அவனது ஆத்திரம் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்துத் தோன்றியதே அன்றி, அவன் தமது விஷயத்தில் சிறிதும் இரக்கம் காட்டுவான் என்ற குறிப்பே தோன்றவில்லை. இருந்தாலும், தாம் அவனை எப்படியாவது சமாதானப்படுத்தி, அந்தப்பெரிய அபாயத்தி லிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டவராய் நயமாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கி, ‘அப்பா கட்டார் நான் உன் விஷயத்தில் பெரிய தவறு செய்துவிட்டேன். கோபித்துக்கொள்ளாதே. இந்த விஷயத்தில் நீ எவ்விதமான அபராதம் விதித்தாலும் நான் அதைக் கொடுத்து உன் மனம் சந்தோஷம் அடையும்படி செய்கிறேன். நீ முதலில் சொன்னபடி நாமிருவரும் இனி சிநேகிதர்கள் ஆகிவிடுவோம்.