பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பூர்ணசந்திரோதயம் - 5 கிளம்பி அதன் பின்புறமெல்லாம் கப்பிக் கொண்டு வெகுதூரம் வரையில் மேல் பக்கத்திலும் பின் பக்கத்திலும் நிறைந்து விட்டது. அந்த வண்டியே ஒருகால் சுக்கல் சுக்கலாக உடைந்து அலக்காக நாற்புறங்களிலும் சிதறிப் போய் விடுமோ என்ற அச்சம் எல்லோரது மனதிலும் உண்டாகும் படி அவ்வளவு மிதமிஞ்சிய விசையோடு வண்டி செல்லத் தொடங்கியது. ஆனாலும், பின்னால் போலீசார் தம்மைத் தொடர்ந்து வந்து பிடித்துக் கொள்வார்களே என்ற பயம் எல்லோரது மனதிலும் இருந்தது. ஆகையால், வண்டி அதைவிட இன்னமும் அதிக விசையாய்ப் போக அந்தக் குதிரைகளால் இயலவில்லையே என்று அவர்கள் ஒரு வித ஆத்திரமும் பதைப்பும் அடைந்தனரே அன்றி, அதை மெதுவாக ஒட்ட வேண்டுமென்று யாரும் நினைக்கவில்லை.

தன்னை விடுவிப்பதாக அவர்களிடத்திலிருந்து கடிதம் வந்த முதல் கடைசிவரையில் கலியாண சுந்தரம் அதில் அதிக நம்பிக்கை வைக்காமல், அதுவும் அம்மன்பேட்டைத் தாதிப் பெண்களாலோ அல்லது கோலாப்பூர் போலீஸ் கமிஷனராலோ செய்யப்பட்ட ஏதேனும் ஒரு புதிய சூழ்ச்சியாக இருக்குமென்று சந்தேகித்திருந்தான். ஆனால், தன்னை ஏற்றிவந்த வண்டியி லிருந்த மனிதரை அவர்கள் சிறிதும் தாட்சணியம் பாராது அடித்து வீழ்த்தித் தன்னை விடுவித்து வந்ததைக் கண்டபிறகு, அவனது சந்தேகம் விலகிவிட்டது. அவர்கள் உண்மையிலேயே தனக்கு அனுகூலமாக இருப்பார்கள் என்றும், அவர்கள் தன்னை நிஜமாகவே விடுவித்தார்களென்றும் அவன் உறுதியாக நம்பினான். ஆனால், அவனது மனத்தில் எழுந்த பலவகையான சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டுமென்ற ஓர் ஆவல் அவனது மனதைத் தூண்டத் தொடங்கியது. அவ்வளவு சீக்கிரத்தில் தான் அதைப்பற்றிக் கேட்பது சரியல்ல என்று நினைத்து அவன் சிறிது நேரம் வரையில் மெளனமாகவே இருந்தான்.