பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

பூவின் சிரிப்பு


எத்தனையோ வாழ்க்கை வசதிகளைத் தேடிக் கொண் டிருக்கிறாய். இறைவனின் ஒரு பகுதியே நீ என்பதையும் கண்டிருக்கிறாய். உன்னுள்ளே, உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களினுள்ளே, கல்விலே, கடலிலே, பூவிலே, பொறியிலே எங்கும் ஒரே இறைவன் இருக்கிறான் என்ற மிகப் பெரிய உண்மையைக் கண்டிருக்கிறாய். பின் ஏன் உனக்குக் கவலை? ஏன் உனக்கு இந்த அழிவு எண்ணம்? சோறில்லையா? ஒருவனை ஒருவன் வெட்டாமல், குத்தாமல் இன்பங் கிடைக்காதா? சிறகு மட்டும் இருந்தால் இந்த உலகத்தில் எத்தனையோ இன்பங்களைத் துய்க்கலாமே என்று ஏங்கினானாம் ஒருவன். சிறகு பெற்ற ஈ என்ன செய்கிறது? மலத்தில் உட்காருகிறது. சீ, அதைச் சொல்லக்கூட அருவருப்பாக இருக்கிறது. சிறகு இருந்து என்ன லாபம்? அதை நன்கு பயன்படுத்த அறிவு வேண்டாவா? மனிதனுக்கு அறிவு இருக்கிறது. ஆனால் அதைக் கோணல் வழியில் அவன் செலுத்துகிறான், பரந்த நல்லவழி கண்ணுக்கு முன்னாலே கிடந்தாலும் அது அவனுக்குத் தெரிவதில்லை.

மனிதா, உனக்குச் சோறு கிடைக்கவில்லையா? இயற்கை அன்னை சோறு போட மறுத்துவிட்டாளா? உனது அறிவை நேராகச் செலுத்தினால் ஒன்றுக்குப் பத்தாக இயற்கை அன்னை கொடுக்கிறாள். ருஷ்யாவிலே பனிப் பாலைகளிலேகூட இன்று கோதுமை விளைகிறதாம். பனியிலே வளரக்கூடிய பாசியையும் கோதுமைப் பயிரையும் ஒட்டி, அவற்றிலிருந்து ஒரு புதிய கோதுமைப் பயிரை உண்டாக்கி யிருக்கிறார்களாம். அது பணிப் பகுதிகளில் வளர்ந்து பயன் தருகிறதாம். இப்படியெல் லாம் செய்யத் தெரிந்த பிறகு சோற்றுப் பஞ்சமேது? மனிதா, ஏன் இப்படி வீணாக அழிவு தேடிக்கொள்கிறாய்? எறும்பை அழிக்கவேண்டுமானால் இறைவன் அதற்கு