பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவின் சிரிப்பு

11


 இறகு கொடுப்பதாகச் செல்லுவதுண்டு. அது பறந்து தீயில் விழுந்து மடிகிறது. அதுபோல உன்னை அழிப்பதற்காகவா இறைவன் அறிவைக் கொடுத்தான்?

மனிதா, எழுந்திரு. சோம்பலை உதறித் தள். கோணல் அறிவை நேராக்கு. பூவின் வாழ்க்கை ஒரு நாள். ஆனால் அதன் வாழ்க்கையில் மறைந்துள்ள உண்மையை நீ பின்பற்றினால் நூறாண்டு இன்பமாக வாழலாம். நேராகக் கிடக்கும் பரந்த சாலையிலே நட. குறுக்கு வழியை நோக்காதே. பிறரைத் துன்புறுத்தி, வஞ்சித்து, அடிமைப்படுத்தி இன்பங்கொள்ள நினைக்காதே. அப்படி இன்பம் பெறுவது முடியாத செயல் அதனால் இன்பங் கிடைக்காது. இத்தனை நாள் வாழ்ந்தும் உனக்கு அது தெரியவில்லையா? உனது திறமையை ஈயைப்போலப் பயன்படுத்தாதே; பூவைப்போல வாழ். வானத்திலே பற; நீந்தி விளையாடு, உலகத்தை ஒரே குடும்பமாகப் பிணை. ஆனால் குண்டைப் போடாதே ஆயிரம் கலைகள் புதிது புதிதாகச் செய். எல்லாம் இன்பத்திற்க்காக; அழிவுக்காக ஒன்றும் இருக்கக்கூடாது. பசுமாசுரனுக்குக் கை எப்படியோ அப்படி உனக்கு அறிவு. அவன் தன்கையைத் தன் தலை மேலேயே வைத்து அழிந்தான். அப்படி அழிந்து போகச் செய்யும் பூதமாக இந்த அறிவை மாற்றிவிடாதே. இதை அலாவுதீனுடைய லாந்தர்ப் பூதமாகச் செய்; உனது வேலைக்காரனாக்கு. எதற்காக? இன்பம் கொண்டு வர. எதற்காக? துன்பப் பேயை உலகிலிருந்து ஒட்ட, எதற்காக? அவனியை விண்ணவர் நாடாக்க. எதற்காக? பூவின் வாழ்க்கையைப் போல மனித வாழ்க்கை மலர.