பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14

பூவின் சிரிப்பு


பாரத நாட்டில் இருப்பதையும் உணர்ந்து கொண்டது. சபர்மதிச் சாதுவின் மணிமொழிகளில் மனித இனத்தைக் காப்பாற்றும் சஞ்சீவி இருப்பதைப் பேரறிஞர்கள் கண்டு கொண்டார்கள். ஆதலால், நாம் இப்பெரிய பணியை வெற்றியுடன் செய்வதற்கு, உடனே எல்லா முயற்சிகளையும் முழுமனத்தோடு செய்யவேண்டும். உலக நன்மையை முன்னிட்டும். எதிர்கால நலத்தை முன்னிட்டும் நாம் இதைச் செய்தாக வேண்டும். ஏழை என்றும் அடிமை என்றும் ஒரு தனி மனிதனோ, ஒரு சிறு நாடோ இருக்கும் வரையில் மனித சமூகத்தின் துன்பங்கள் நீங்க முடியாது. வல்லரசுகள் இதை உணர்ந்து நாடுகள் அனைத் தையும் சமமாக எண்ண முயலவேண்டும். அப்பொழுது தான், உலகனைத்தையும் ஒரு பெருங் குடும்பமாக அன்பெனும் மந்திரத்தால் பிணைக்க வேண்டிய வசதி பிறக்கும்.

நான் மறுபடியும் சொல்லுகின்றேன். அன்பொன்றே இன்று உலக நோய்க்கு மருந்து. அன்பு அசுரத் தன்மையை மாற்றிவிடும். அன்பு கோணிய அறிவை நேராக்கும். அன்பே இன்பத் தேனூற்றை எங்கும் பெருகச் செய்யும்.

அன்பே சிவம் என்று மறைகள் முழங்குகின்றன. அன்பே இறைவன். அவனுக்குச் சிறந்த வழிபாடு செய்ய வேண்டுமானால் அன்பு செய். அன்பை அவனுக்கு நிவேதனம் செய். அது ஒன்றுதான் அவனுக்கு உகந்த வழிபாடு.

இறைவன் எங்கிருக்கிறான் ? கோயிலிலா ? கல்லிலா ? கயிலாயத்திலா? கடலிலா? அவன் எங்கும் இருக்கிறான். தூணிலும் உள்ளான். துரும்பிலும் உள்ளான். வீதி