பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



18

பூவின் சிரிப்பு


என்று ஐயுறும்படி பருத்து இருட்டு மேனியாக இருக்கும். ஏரில் பூட்டி ஓட்டினால் போதும், காலைப் பரப்பிக் கொண்டு அப்படியே படுத்துவிடும். என்ன அடி அடித்தாலும் அசையாது. ஏதோ கொஞ்சம் அலுத்துப் போகும்படி ஒருநாள் அதனிடம் வேலை வாங்கியதுதான் எங்கள் குற்றம். அன்று படுத்துப் பழகியது இப்போது தொடக்கத்திலேயே படுத்துக் கொள்ளுகிறது!

இது எருமை மாட்டுக்குத்தான் பொருந்தும் என்று நினைத்துவிடாதீர்கள். எருமைமாடு முதல் இந்திய அமைச்சர் வரை எல்லா உயிரினங்களுக்கும் இதே சட்டந்தான். ஒன்றைச் செய்து பழகிவிட்டாலோ அல்லது சொல்லிப் பழகிவிட்டாலோ அதை மாற்றுவதென்பது எளிதல்ல.

சிலர் பேசும்பொழுது, 'அப்பா, இங்கே காகிதம் கீகிதம் கிடைக்குமா?’ என்பார்கள்: இன்னும் சிலர், 'அப்பா, இங்கே பேப்பர் கீப்பர் கிடைக்குமா?’ என்பார்கள். இந்தக் கீகிதமும், கீப்பரும் எதிர்பாராத விதமாக எந்த வேளையிலும், சொல்லுபவர்களே நாணும்படியாக நுழைந்துவிடும்.

பழக்கத்தின் இந்த ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்தினால் பெரிதும் நன்மை ஏற்படும். சிறுவயது முதற்கொண்டே அதிகாலையில் துயில் எழ ஒருவன் பழக்கப் படுத்திக்கொண்டால் அதனால் அவன் எவ்வளவோ நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்வதைப் பின்னால் அறிந்து கொள்வான். அவனிடம் 'ஐம்பதிரவில் அகலுந் துயிலினால்' என்ற வாக்குப் பொய்த்துவிடும்.

ஒரு நல்ல பழக்கம் நமக்கு அமைய வேண்டுமானால், அதைத் தொடக்கத்தில் சில நாட்களுக்கோ திங்களுக்கோ விடாப் பிடியாகச் சிறிதும் வழுவாது பின்பற்ற முயல