பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பூவின் சிரிப்பு


நளபாகத் தறுசுவையில்
நல்ல நல்ல உண்டிவகை;
அளகா புரியது போல்
அளவற்ற செல்வங்கள்;
காலுக்குச் சோடு; நல்ல
காசிநகர்ப் பட்டுடைகள்;
மேலுக்குப் பொன்னணிகள்
விதவிதமாய்ச் சுண்ணங்கள்-

இவற்றையெல்லாம் கற்பனை செய்தாவது அவர்கள் இன்புறுவார்களோ என்ற கேள்வி பிறக்கவே எனக்கு ஒரு நொடி நேரம் உள்ளத்திலே ஆறுதலும் மகிழ்ச்சியும் தோன்றலாயின. ஆனால் அவை மறுகணத்திலேயே சாம்பலாய்ப் போய்விட்டன. கற்பனை செய்ய வேண்டுமானாலும் அவற்றைப்பற்றி யெல்லாம் கேள்வியிலாவது தெரிந்திருக்க வேண்டாமா? கண்டும் கேட்டும் அறியாதவற்றை எப்படித்தான் அவர்கள் கற்பனை செய்ய முடியும்? குதிரையில் ஒருவன் சவாரி செய்வதைக் கண்டதனால்தானே குழந்தை ஒரு குச்சியைக் குதிரையாகப் பாவித்துச் சவாரி செய்து மகிழ்கிறது? குதிரையையே படத்திலுங் கூடக் கண்டறியாத குழந்தை அதன்மேல் சவாரி செய்வதாக எப்படித்தான் கற்பனை செய்ய முடியும்? ஆதலால் இச்சேரிக் குழந்தைகள் நளபாகத்தையும் காசிப்பட்டாடையையும், அளகாபுரியையும் எவ்வாறுதான் கற்பித்து இன்பமடைய முடியும்?

இவையெல்லாம் கற்பிக்க
எவ்வா றறிந்திடுவார் ?
கனவுலகிற் காண்பதற்கும்
கருத்திலவை வேணுமன்றோ ?
மனக்கோட்டை கட்டுதற்கும்
வகையறியா ஏழ்மையினர்