பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

பூவின் சிரிப்பு


என்று யாராவது வினா எழுப்பினால்தான் வாய் ஊமையாய் விடுகிறது. இப்படி ஆதியும் அந்தமும் தெரியாத காலத்தை நாம் சிறு சிறு துண்டுகளாகப் பிரித்துக் கணக்கிட்டுப் பார்க்க முயல்கிறோம். சூரியன் தோன்றி மறைந்து, மறுபடியும் தோன்றும் எல்லையை ஒரு நாள் என்று, நம் நாட்டிலே வகுத்திருக்கிறார்கள். அந்த நாளை அறுபது நாழிகைகளாகவும், இன்னும் சிறு பகுதிகளாகவும் பிரித்திருக்கிறார்கள். மனிதன் வேடனாகக் காடுகளிலும் மலைகளிலும் திரி வதை விட்டு உழவனாக மாறிய பருவத்தில்தான் இவ்வாறு நாளையும், பிறகு திங்களையும், ஆண்டையும் கணக்கிடத் தொடங்கியிருக்க வேண்டும். அது வரையில் அவனுக்கு இது பற்றிக் கவலையே இருந்திராது. உழுது பயிரிட முனைந்த போதுதான் பருவங்கள் மாறி மாறி ஒரு குறிப்பிட்ட நியதிப்படி வந்துகொண்டிருப்பதைக் கவனித்திருப்பான். கிறிஸ்து பிறப்பதற்கு 2269 ஆண்டுகளுக்கு முன்பே ஹீ, ஹோ என்ற பெயருடைய சீனா நாட்டு வானவியல் அறிஞர் இருவர் காலத்தை அளந்து ஆண்டைக் கணக்கிட்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள். வேத காலத்திலேயே இந்தியாவில் ஆண்டு 360 நாள் கொண்டதென்றும் பன்னிரண்டு திங்கள் கொண்டதென்றும் வகுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஆண்டைப் பற்றிய இந்தக் கணக்கில் எப்படியோ ஐந்து நாட்கள் குறைவு படுகின்றன என்பதை அக்காலத்திலேயே உணர்ந்திருந்தார்கள். ஓர் ஆண்டில் 365 நாட்கள் வேண்டும் என்று தெரிய வந்தது. அதனால் 30 நாட்கள் கொண்ட சமமான திங்கள் போய் 30, 31 என்றிம்மாதிரி நாட்களையுடைய திங்கள்கள்