பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலம்

39


வாழ்வதற்குத் தகுதியுள்ளதாக ஆயிற்றென்றும், இன்னும் இது குளிர்ந்து கொண்டே போகிறதென்றும், இன்று இவ்வுலகத்திற்கே ஒளியும் வெப்பமும் கொடுக்கிற அந்தச் சூரியனே இன்னும் பல கோடி ஆண்டுகளில் குளிர்ந்து போகுமென்றும் பேசிப் பெருமையடித்துக் கொள்ளுகிறோம். உயிரினங்களின் இறுதியில் வந்தவன் மனிதன்; ஆனால் அவன் தான் முதலில் தன் மூளையைப் பயன்படுத்தினான் என்று தற்பெருமை கொள்கிறோம். ஆனால், "அதெல்லாம் சரி; இந்தக் காலம் எப்பொழுது தொடங்கிற்று ? எப்பொழுது முடியும்?" என்று கேட்டகும்போதுதான் தலை குனிந்து போய்விடுகிறது. விடை வருவதில்லை.

பிறகு வேறு வகையில் உவமை, உருவகம் முதலிய அணிகளைக் கொண்டு பேசி, நமது அறியாமையை மறைக்க முயல்கிறோம்.

நமக்கு ஓர் ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள். நமக்கு நானூற்று முப்பத்திரண்டு கோடி ஆண்டு பிரமனுக்கு ஒருநாள். இப்படி நீண்ட ஆயுள் கொண்ட பல பிரம்மாக்கள் அண்டங்களைப் படைக்கத் தோன்றி மறைந்திருக்கிறார்கள்என்றால் காலத்தின் ஆதியைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று விரிவுரை நடத்துகிறோம். ஓர் ஆங்கி அறிவாளி எழுதினார் "வடக்கே வெகு தொலைவிலே ஒரு மலை நிற்கிறது. அதன் உயரம் நூறு மைல், நீளம் நூறு மைல்; அகலமும் அப்படியே. அந்த மலைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு சிறு பறவை வந்து தனது அலகைத் தீட்டிக் கொள்கிறது. அப்படிச் செய்வதால் என்று அந்த மலை தேய்ந்து மறையுமோ அன்று கற்பகாலத்தில் ஒரு நாள் கழிகின்றது" என்று. படிக்க இன்பமாய்த்தான் இருக்கிறது. காலத்தைப் பற்றிய வினாவுக்குத்தான் விடையைக் காணோம்.