பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

பூவின் சிரிப்பு


திற்கு அப்பாற்பட்டவன். அவனைக் காலம் ஒருவகை யிலும் பாதிக்க முடியாது. காலத்தால் பாதிக்கப்பட்ட வனாக இருந்தால் அப்பொழுது அவனுக்கு முதலிறுதி இருந்தே தீரவேண்டும்.

நம் முன்னோர்கள் இதை ஒரு கதைமூலம் வெகு அழ காகச் சொல்லியிருக்கிறார்கள். மார்க்கண்டனுடைய வரலாற்றில் காலத்தைக் கடவுளுடைய கையாள் என்று காட்டியிருக்கிறார்கள். இறைவனால் உண்டாக்கப் பட்டது காலம்; அதை அவரால் அழிக்கவும் முடியும்; ஆனால் காலம் அவரை எவ்வகையிலும் பாதிக்க முடியாது.

சித்தர்களும் யோகிகளும் தங்கள் உடம்பை இந்தக் காலம் பாதிக்காதவாறு வாழக் காயகற்பங்கள் செய்த தாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. காயகற்பம் செய்யும் முறைகளெல்லாம் இன்றும் செய்யுள் வடிவத்திலே தமிழில் இருக்கின்றன. ஆனால் இக்காலத்தில் அதைச் செய்து வெற்றி பெறுபவர்களை நாம் காண்பதில்லை.

முடிவாகச் சொல்லுமிடத்து, காலத்தைப் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே. அதாவது, 'காலத்தை நம்மால் வெல்ல முடியவில்லை; ஆனால் காலம் நம்மை மட்டுமல்ல, மற்ற உயிர்ப் பிராணிகளை மட்டு மல்ல, உயிரற்ற பொருள்களையும் பாதிக்கின்றது' என்பதே. காலத்தைப் பற்றி நமக்குத் தெரியாததும் முக்கியமாக ஒன்றுதான். காலம் என்று தொடங்கிற்று என்பதும் தெரியாது; என்று முடியும் என்பதும் தெரியாது.