பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காற்றாடி


ஒரு சிறிய ஓலை நறுக்கு. அதன் மையத்தில் சின்னத் தொளையிட்டு முள்ளைச் செருகிச் சோளத்தட்டுடன் இணைத்துக் காற்றிலே பிடித்துவிட்டால் வந்து விட்டது அதற்கு உயிர். ஒரே வேகம். கிறுகிறுவென்று சுற்றத் தொடங்கி விடுகிறது. இந்தக் காற்றாடியின்மேல் சிறு வயதிலேயே ஏற்பட்ட விருப்பம் இன்னும் எனக்கு மாறாதிருக்கின்றது.அதன் சுழற்சியிலே எத்தனை உணர்ச்சிகள் பிறக்கின்றன! வாழ்க்கையின் உயர்வு தாழ்வுகளைப் பற்றிப் பெரிய விளக்கம் செய்பவன் அதைக் காற்றாடிக்கு ஒப்பிடுகின்றான். காற்றாடியின் முனைகள் மேலும் கீழுமாய் மாறி மாறிச் சுற்றுவதுபோல வாழ்க்கை ஓங்கியும் தாழ்ந்தும் மாறிக் கொண்டிருக்கிறதாம். ஒரு நிலையில் நில்லாது அலையும் உள்ளத்திற்குக் காற்றாடியை உவமை கூறுகிறார் தாயுமானவர்.

சித்திரைத் திங்களிலேயே காற்றாடிக்கு உயிர் வந்து விடும். கறங்கோலையைத் தேடிச் சிறுவர்கள் புறப்பட்டு விடுவார்கள். ஆனால் ஆடித் திங்களில்தான் காற்றாடிக்கு நல்ல இளமை. அப்பொழுது அதன் முறுக்கும், வேகமும் சொல்லி முடியா.

காற்றுத்தேவன் காற்றாடியின் காதலன். அவன் தொட்டுவிட்டால் அதற்கு உண்டாகும் இன்பம் கரை கடந்து விடுகிறது. அந்த முள் மட்டும் இல்லாவிட்டால் ஓலை நறுக்கின் களியாட்டம் எப்படி முடியுமென்றே சொல்ல முடியாது.