பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

பூவின் சிரிப்பு


காற்றாடியின் முதுகிலே தொளையிட்டுக் கொண்டு முள் அசையாது நிற்கிறது. அது துன்பம் தருகிறதா, காதலர் கூட்டத்திற்கு இடைஞ்சல் செய்கிறதா, துணை செய்கிறதா என்று எண்ணிப் பார்க்கும்போது பெரிய பெரிய தத்துவ ஆராய்ச்சிகள் எல்லாம் பிறந்து விடுகின்றன. எது விடுதலை, எது கட்டுப்பாடு என்றெல்லாம் உள்ளத்திலே விவாதம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் இவற்றிற்கெல்லாம் காற்றாடி செவி சாய்க்கிறதா என்ன? அது ஒன்றையும் கவனியாது தான் பெற்ற இன்பத்திலே மூழ்கி மூச்சுக்கூட வாங்காமல் விர்ரென்று தலைகால் தெரியாதபடி வட்டமிடுகின்றது. அதுமட்டுமா? சுற்றும்போது அந்த ஓலை தனது சொந்த உறுவத்தையே இழந்து, ஒரே வட்டமாகின்றது. இறைவனை அச்சாணி யாகக் கொண்டு வாழும் ஞானிகளும் இப்படித்தான் தம் தனிவடிவம் இழந்து, இன்பப் பெருக்கிலே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

காற்றாடி சுற்றும்போது அதைக் கவனித்துப் பாருங்கள், மாயோன் கையில் திகிரி போன்ற ஒரு வட்டம் தோன்றுகிறதா? நன்கு கவனியுங்கள். அந்த வட்டத்திலே காற்றாடி இல்லாத இடமிருக்கின்றதா? தொட்டுக் காட்ட முடியுமா? முடியாது. அது இறைவனைப் போன்று எங்கும் உள்ளதாய் ஆனால் அதே வேளையில் ஓரிடத்திலும் இல்லாதிருக்கின்றது.

சிறுவர்களுக்கு இவைபோன்ற ஆராய்ச்சிகளைப் பற்றிக் கவலையில்லை. அவர்களுக்குக் காற்றாடியின் வேகத்திலேதான் கண். காற்றாடி சுற்றுகிறது. சிறுவர்கள் அதைக் கண்டு உவகை மீறிக் குதிக்கிறார்கள்; கை தட்டிக் களிக்கிறார்கள்.