பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழைக்காலக் காட்சி

47

வெண்மையிலே கறுப்பை அள்ளித் தெளித்து ஒரு பொட்டு நீலத்தையும் கூட்டி அவைகளையும் நன்கு ஒன்றோடொன்று சேராதபடி ஒளியற்ற வண்ணக் கலவையாகச் செய்தது போன்ற புகைமேகங்கள்.

தூக்கம் நன்கு தெளியாத குழந்தை சிணுங்கிக் கொண்டிருப்பது போலிருத்தது வானம். ஒளியில்லை; தெளிவில்லை; சிடுமூஞ்சிக் குறிப்புத்தான் தென்பட்டது.

இரு மருங்கிலும் பச்சைப் பசேலென்று தோன்றும் சிற்றோடையுடனே நீங்கள் சிறிது தொலையாவது நடந் திருக்கிறீர்களா? நடக்கும்போது அதைப்போல அருமை நண்பன் யாரிருக்க முடியும்? மழலை கொஞ்சுகின்ற பாட்டு வேண்டுமா? பாறையில் ஏறித் தத்திக் குதிக்கும் ஆட்டம் வேண்டுமா? நெளிந்து நெளிந்து, சுழிந்து சுழிந்து, வேடிக்கை காட்ட வேண்டுமா? ஓடையைப் போன்று யாரால் முடியும்?

எனக்குச் சிற்றோடையொன்றும், எதிரிலே பசுநீலம் போர்த்த மலைத்தொடரும் இருந்தால் போதும். உலாவும் வேளையில் வேறு துணையே வேண்டியதில்லை.

இன்று ஓடை இளமைப் பருவம் அடைந்து விட்டது. அதன் நடையிலும், குரலிலும் இளமையின் ஆற்றலும் மிடுக்கும் வெளிப்படுகின்றன. கரையோரத்திலே வளர்ந்து பூத்திருந்த செவ்வரளி சிவந்து, நாணத்துடனே குனிந்து ஓடையைத் தனது பூவிதழ்களால் முத்தமிடுகின்றது. மெல்ல வந்த காற்றுத்தேவன்தான் இவர் களுக்கிடையேயுள்ள காதலை இவ்வாறு வெளியில் காட்ட உதவி செய்பவன்.

செவ்வரளி குனிந்த வேளையில் ஒரு சின்னஞ் சிறிய சிங்கார மீன்கொத்தி அதன் மேல் வந்து அமர்ந்தது.