பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

பூவின் சிரிப்பு


உடம்பெல்லாம் நீல நிறம்; மார்பிலே வெண்மை வட்டம்: பாக்கின் செந்நிறங் கொண்ட பெருமூக்கு. அந்த அழகுக் குருவி ஆடி அமர்ந்திருப்பதே ஒய்யாரம்! இன்று புது வெள்ளத்தில் தெளிவில்லையாகையால் இச் சிறிய மீன் கொத்திப் பெருமூக்கனுக்கு நல்ல வேட்டை கிடைக்காது. இருந்தாலும் ஆட்டமும் ஓட்டமும் குறைய வில்லை.

ஓடையின் பக்கத்திலே தென்னந்தோப்பு ஒன்று இருக்கிறது. அதைக் கடந்தால் சிறு தொலைவில் ஒரு மாந்தோப்பு. எல்லாம் சேலத்துப் பேர்போன நடுச்சாலை. வரப்போகும் வசந்தக்காதலனை எதிர்கொண்டழைக்க அங்கே இப்பொழுதே முன்னேற்பாடு தொடங்குகின்றன. பழுத்த பழைய உடைகள் களைந்தெறியப்படுகின்றன; புது உடைகளுக்கு ஆணையிட்டாகி விட்டது.

சோலைக்குள்ளிருந்து செம்போத்து ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. மைனாப்பறவைகள் ஒயிலாக நிலத்தில் அமர்ந்து வண்ண வண்ணப் பேச்சுப் பேசிக்கொண்டு காலைச் சிற்றுண்டி தேடுகின்றன.

மறுபடியும் மழை இந்த வேளையில் தொடங்கி விட்டது. மழையென்றால் பெரு மழையில்லை; கொகத் துளி. அடாடா அது மெல்ல வந்து முகத்தைத் தீண்டுவதில் எவ்வளவு இன்பம் இருக்கிறது!

வருமுன் அணை போடும் மனிதர்கள் சிலர் வெளியே புறப்படும்போதே குடை, கைத்தடி என்றிப்படிப் பல தற்காப்புக் சுமைகளைக் கொண்டுசெல்வார்கள். பாவம், அவர்களுக்கு இந்த இன்பம் தெரியவே தெரியாது.

வானை அண்ணாந்து நோக்கினேன். இன்னும் ஒரே மேகப் போர்வைதான். கிழக்கில் மட்டும் பகலவனின்