பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

கரிக் குருவி


'காகங் கரைந்தது காலையுமாயிற்று’ என்று தொடங்கும் ஓர் அழகிய பாட்டு உண்டு. அதிகாலையிலே காக்கையின் குரலை நாம் கேட்கிறோம்; மெய்தான். ஆனால் அதற்கு முன்னாலேயே மற்றொரு குருவி குரல் கொடுப்பதைக் கவனித்தீர்களா ? அதுதான் கரிக் குருவி. காக்கைக்கு முன்னெழுந்து கூவத் தொடங்குகிறது. அந்தச் சின்னப் பறவை.

உழவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். 'கரிக் குருவி கூப்பிடுகிறது; கிழக்கு வெளுக்கும் வேளை வருகிறது; கவலை இறைக்கப் புறப்படலாம்' என்று அவர்கள் பேசிக் கொள்வார்கள்.

எனக்கென்னவோ இளமை முதற் கொண்டு அந்தக் குருவியைக் கண்டால் பிடிக்கிறதில்லை. அந்தக் காலத்திலே என்னை இரட்டைவால் என்று சொல்வார்கள். அதாவது நான் மிகவும் குறும்பு செய்யும் பிள்ளை என்பது பெரியவர்களின் எண்ணம். ஆனால் நான் அதை ஒத்துக் கொள்ளவில்லை. இரட்டைவால் என்று யாராவது பேசி விட்டால் எனக்குக் கோபம் கோபமாய் வரும். கரிச்சான் என்னும் கரிக் குருவிக்கு இரட்டை வாலுண்டு. அதனால் அதை இரட்டைவால் கரிக் குருவி என்று எங்கள் மாவட்டத்தில் அழைப்பார்கள்; ஆனால் அந்த வாலுக்கும் எனக்கு அதன் மேலுள்ள வெறுப்புக்கும் யாதொரு தொடர்பும் இருக்கவில்லை.

கன்னங் கரேலென்று காக்கை இருக்கிறது; குயிலிருக்கிறது. அவை போதாவா ? இன்னும் ஓர் இருட்டு நிறக்