பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தைப் பொங்கல்

57


 பறை ஒலிக்கிறது. மேளம் முழங்குகிறது. அதிர் வெடி அதிர்கிறது.

எல்லோரும் அவரவர்கள் பட்டிக்குப் புறப்பட்டாய் விட்டது.

பட்டி ஆவுடையாருக்கு ஒரு பொங்கல், முருகனுக்கு ஒரு பொங்கல், குல தெய்வத்திற்கு ஒன்று, மாரியாத்தா ளுக்கு ஒன்று மாகாளியாத்தாளுக்கு ஒன்றுஎன்று இப்படியாகக் குறைந்தது ஐந்து பொங்கல். இவற்றிற்கு மேல் வேறு தெய்வங்களுக்கும் பொங்கல் வைப்பதுண்டு.

புன்செய் நிலத்திலே பட்டி அருகிலே மும்மூன்று கற்களாகக் கூட்டி அடுப்பிட்டுப் பொங்கல் வைப்பதில் ஒரு தனி இன்பம் இருக்கின்றது. பெண்களுக்குத்தான் என்ன கொண்டாட்டம்.

பொழுது இறங்குவதற்குள் பொங்கல் பொங்கிச் சமைந்துவிடும். பலவிதமான காய்கறிகள்: பூசணியும், மொச்சையும் இல்லாத பொங்கலே கிடையாது,

தேய்த்துக் கழுவி வயிறார மேய்த்து வந்த மாடுகளெல்லாம் பட்டிக்குள் சேர்ந்துவிட்டன.

மாடு மேய்ப்பவன் அன்று பட்டினி காப்பான்; அவனுடைய திருநாள் அது. பண்ணைக்காரனுக்கும் அது திருநாள் தான்.இருந்தாலும் மேய்ப்பவனுக் குத்தான் முதலிடம். அவன் புல்லாங்குழலை எடுத்து அடிக்கடி ஊதுகிறான்.

பட்டிக்குள்ளே சிறு குளம் அமைத்தாய்விட்டது. அதைச் சுற்றிலும் விருந்து படைக்கிறார்கள். மஞ்சள் கொத்து, கரும்பு எல்லாம் மங்களகரமாக அமைந்து அழகு செய்கின்றன. மண்விளக்கு ஒளிவிடுகின்றது.