பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

பிறந்தன. நுால்களைப் படிக்கும்போது எழுந்த எண்ணங்கள், உலாவும்போது தோன்றிய உணர்ச்சிகள் இவைகளெல்லாம் இவற்றில் இடம் பெற்றிருக்கின்றன.

ஆனால் இந்த மனம் இருக்கிறதே, அது மிகப் பொல்லாதது. அதன் கோணல்களையும், குறும்புகளையும், பச்சோந்தி மாறுதல்களையும் அளவெடுக்க முடியாது. ஒரே காட்சி, ஒரே நிகழ்ச்சி அதற்கு வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறாகத் தோன்றுகிறது. அதைப்பற்றி மனத்தின் கற்பனைகளும் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறாக இருக்கின்றன.

அது என்னை மக்கட் கூட்டத்தோடு தள்ளிவிட்டு விலகி நின்று என்ன என்னவோ கற்பனை செய்ய முயல்கிறது: நானும் அதைப் புறம்பாக நிற்கச் செய்து அதன் போக்கை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பகுத்துப் பார்க்க முயற்சி செய்கிறேன். இப்படிப் போட்டியாக நடைபெறும் முயற்சிகளில் எந்தப் பக்கத்திற்கும் வெற்றி கிடைக்காது என்ற முடிவுதான் அடிக்கடி புலனாகிறது. இருந்தாலும் அந்தப் போட்டியைக் கைவிட எனக்கு மனமில்லை.

கட்டுரை என்ற சொல்லை இக்காலத்திலே ஒரு புதிய பொருளிலே வழங்குகிறாேம். கட்டுரை இலக்கியமும் ஒரு வகையில் தமிழுக்குப் புதியதுதான். ஆங்கிலம் போன்ற மேல்நாட்டு மொழிகளிலே இத்துறை மிகப் பல ஆண்டுகளுக்கு முன்பே சிறப்பெய்திவிட்டது.கட்டுரையானது இலக்கியத்தின் சீரிய அங்கமாக வளர்ச்சி பெற்ற பின்னரே ஆங்கிலத்தில் சிறுகதை வளரத் தொடங்கியது என்று கூறலாம். ஆங்கிலத்தில் உள்ளது போன்ற தனி மனிதனின் உணர்ச்சிகளையும், உள்ளப் பாங்கையும் பிரதிபலிக்கும் கட்டுரைகள் தோன்றுவதற்கு முன்பே தமிழிலே சிறுகதை இலக்கியம் பிறந்து வளர்ந்திருக்கிறது. ஆங்காங்கு விதி விலக்காகச் சில கட்டுரைகள் தோன்றி இருக்கலாம். ஆனால் சிறுகதை வளர்ந்த அளவிற்கு வளரவில்லை.