பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

பூவின் சிரிப்பு


ஒரு வேலையுங் கிடையாது. எப்பொழுதும் தின்று கொழுத்து சுற்றிக்கொண்டிருக்கும். இன்று அந்தக் காளைகளைப் பிடித்துச் சலங்கை கட்டி ஆட்டம் பழக்குவார்கள். கோயிலைச் சுற்றியும் பல மிடுக்கான தோற்றங்கொண்ட காளைகளைப் பார்க்கலாம்.

ஒரு பக்கத்தில் ஒயில் கும்மி அடிக்கிறார்கள்: வள்ளியம்மன் ஒயில் கும்மி. தலைப்பாகை வரிந்து கட்டிய இளைஞர்கள் எதிர்எதிராக நின்று சந்தத்திற்குத் தக்க வாறு ஆடிப் பாடுகிறார்கள். கால் நாழிகைக்கு ஒரு புது வகையான ஆட்டம். அவர்களைச் சுற்றி ஒரு பெருங் கூட்டம்.

இங்கே இப்படி இருக்கும்போது ஊரிலே பெண்கள் கூடிப் பூப்பறித்து வருவார்கள். பிறகு பெரிய தனக்காரர் வீட்டிலே முதற் கூட்டம் கூடுவார்கள். அங்கு தொடங்கியே எந்த நிகழ்ச்சியும் நடக்கவேண்டும். மார்கழித் திங்களெல்லாம், அதிகாலையில் வாசலை மெழுகிக் கோலமிட்டு வைத்து வணங்கிய பிள்ளையாரை எடுத்து வருவார்கள். வீட்டுக்கு வீடு கும்மி, பாட்டு, சிரிப்பு-ஒரே அமர்க்களம்.

பிறகு எல்லோருமாக ஆற்றுக்குச் சென்று பிள்ளை யாரை விட்டு விட்டுப் பொழுது சாயும் வரை விளையாட்டிலும் கூத்திலும் காலம் கழித்து வீடு திரும்புவார்கள்.

கோயிலுக்குப் போன ஆண்களும் அந்த வேளையில் வந்து சேருவார்கள்.

பொங்கல்தான் எங்களுக்குப் பெரிய கொண்டாட்டம். பொங்கலோ பொங்கல். பட்டிப் பொங்கல், பால் பொங்கல்; பொங்கலோ பொங்கல்!

கொங்குநாட்டு ஊர்களில் பொங்கல் நடைமுறை இது .