பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

மறந்த பருவம்


 ன் அன்பர்களே, உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நன்கு எண்ணிப் பார்த்து விடை கூறுங்கள். இல்லை; நீங்கள் கூற வேண்டியதில்லை; உங்கள் விடையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு நீங்கள் சொல்லாமலே அது என்னவென்று தெரியும், அதுதான் இல்லை என்பது.

ஆமாம், கேள்வி இன்னதென்று சொல்லாமலே விடையைச் சொல்லுகிறீர்களே என்று கேட்கிறீர்களோ? இதோ அந்தக் கேள்வி. குழந்தைப் பருவத்திலே உங்கள் இளம் உள்ளத்தில் எழுந்த எண்ணங்கள், உணர்ச்சிகள், அதிர்ச்சிகள், அன்றடைந்த அனுபவங்கள் நினைவில் இருக் கின்றனவா? பிறந்தது முதல் ஐந்து வயது வரையிலுள்ள காலத்தையே குழந்தைப் பருவமென்று நான் இங்கே குறிப்பிடுகிறேன். யாருக்காவது ஏதாவது ஒன்று நினைவிற்கு வருகிறதா? பாட்டி சொல்லியிருப்பாள்: நீ சிறு பிள்ளையாக இருந்தபோது எத்தனையோ குறும்பு பண்ணுவாய்; அடுப்புக் கரியை எடுத்துக் கொண்டு சுவரெல்லாம் எழுதுவாய், எதற்கெடுத்தாலும் கீழே விழுந்து புரண்டு அழுவாய்' என்றெல்லாம். அவற்றை நான் கேட்க வில்லை. உங்களுக்கே தெளிவாக ஏதாவது நினைப்பில் இருக்கிறதா?

இப்பொழுது நான் முன்கூட்டியே விடைசொன்னது சரியென்று தெரிந்துவிட்டதல்லவா? நூற்றுக்கு நூறு என் வாக்கு மெய்யாகும் என்பது உறுதி. எங்காவது பத்தாயிரத்தில் ஒருவர் வேண்டுமானால் சற்று வாதாட முன்