பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கார்த்திகைப் பிறை

67


 ந்து ஆண்டுகள் சென்றபின் இன்றுதான் மறுபடியும் கார்த்திகைப் பிறையைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதைக் காண்பதே அவ்வளவு அருமை. 'கார்த்திகைப் பிறையைக் கண்டது போல 'என்ற பழ மொழியும் அதனாலேயே தோன்றியிருக்கின்றது.

கார்த்திகைத் திங்கள் மழைக்காலமல்லவா? வானத்திலே எப்பொழுதும் கருமேகங்கள் கவிந்திருக்கும். மழை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சளசளவென்று பெய்யத் தொடங்கிவிடும். பகலவனைக் காண்பதே பல நாட்களில் இயலாது. பிறகு மெல்லிய மின்னற்கொடி போன்ற மூன்றாம் பிறையைக் காண்பது எப்படி?

இவ்வாண்டு நான் தனிப்பட்ட வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் நேற்றுவரை, ஏன், சென்ற இரவிலும் இன்று காலையிலுங்கூட ஒரே அடைப்பும் தூறலுமாக இருந்த வானம் இவ்வாறு மாறிவிடுமா? பகல் ஒரு மணிக்கே கதிரவனின் பொற்கிரணங்கள் பூமியில் எங்கும் படிந்து புதுமையாக வீற்றிருந்தன. நீல வெளியிலே சிற்சில இடங்களில்தான் மேகக் குவியல்கள் மிதந்தன. அவற்றின் மையப்பகுதிகள் இருண்டிருந்தாலும் விளிம்புகள் வெண் சுதை போன்று ஒளிவிட்டன. அந்த மேகங்கள் வானத்தை அணி செய்யும் அழகை எப்படி எடுத்துரைப்பது! நொடிக்கு நொடி மாறி மாறிப் புதிய புதிய ஓவியங்களையும், தோற்றங்களையும் படைக்கும் விந்தையை வருணிப்பது எளிதல்ல,