பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

நீதியையும் அறநெறியையும் அடிப்படையாகக் கொண்டு எழுந்த கட்டுரைகள் ஒரு வகை.அவற்றை முன்பே நாம் தமிழில் கண்டிருக்கிறாேம். அதனால் கட்டுரை என்றாலேயே அறிவு கொளுத்துவதாக அமையவேண்டும் என்ற எண்ணமும் பொதுவாக ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற கட்டுரைகளில் ஒருவருடைய தனி மனப்பான்மையையும், உணர்ச்சிகளையும் காண இயலாது.

கட்டுரை எழுதுவதற்கு ஏற்ற பொருள்கள் யாவை என்பது பற்றிய ஆராய்ச்சி மிகுந்த சுவையுடையதாகும். வாய்மை, அறம் போன்ற பொருள்கள் தாம் ஏற்றவையா என்றால், ஆம் என்று உடனே கூறத் தோன்றும். ஆனால், மேல்நாடுகளில் வளர்ச்சியடைந்துள்ள கட்டுரைகளை நோக்கும்போது இந்த விடை முற்றும் சரியாகுமா என்ற ஐயம் பிறக்கின்றது. எப்பொருளைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்; ஆனால் அவ்வாறு எழுதும் கட்டுரைகள் எழுதுவோருடைய சொந்த மனப்பான்மையையும், உணர்ச்சிகளையும் தாங்கியிருக்க வேண்டும் என்ற முடிவும் வலிவடைகின்றது. ஏ. ஜி. கார்டினர் என்ற ஆங்கிலக் கட்டுரை ஆசிரியர் 'எனது பயணத் தோழன்' என்ற தலைப்பில் ஒரு கொசுவைப்பற்றி அழகான கட்டுரை எழுதியிருக்கிறார் ஒரு நாள் இரவு அவர் ரெயிலில் போய்க்கொண்டிருந்தாராம். அவர் இருந்த பெட்டியில் வேறு யாருமே இல்லையாம்; ஆனல் ஒரு கொசு மாத்திரம் பயணம் செய்ததாம். அதைப்பற்றி எழுந்த உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் அக்கட்டுரையிலே தீட்டி இருக்கிறார். அதைப்போன்ற பல ஆங்கிலக் கட்டுரைகளை எடுத்துக் காட்டலாம். அற்பம் என்று கருதக்கூடிய பல பொருள்களை அடிப்படையாகக் கொண்டு அவைகள் எழுதப் பெற்றிருக்கின்றன.

எழுதுவதிலே இலக்கியச் சுவையும் கலைப் பண்பும் இருக்க வேண்டும்; அவை மிக முக்கியம். அவ்வாறிருந்தால் எப்பொருளைப்பற்றியும் கட்டுரை எழுதலாம் என்று தோன்றுகிறது.