பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறட்டை

71


 ரு பெரிய செல்வர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்று நான் மிகப் பெரிய சங்கடத்திற்குள்ளானேன் என்று சொன்னால் நீங்கள் யாரும் எளிதில் நம்பமாட்டீர்கள். திருமணம் என்றாலே குதூகலமான நிகழ்ச்சி அல்லவா? அதிலும் பணம் படைத்தவர் நடத்தும் திருமணத்தைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?' என்று இப்படிக் கேள்விகள் உடனே உங்கள் உள்ளத்தில் உதயமாகி விடும். மெய்தான். அந்தத் திருமண வைபவத்திலும் குதூகலத்திற்குக் குறைவே கிடையாது. எதிர் பார்த்ததற்கும் அதிகமாக இருந்ததென்றுதான் சொல்ல வேண்டும். நளபாகத்தை எளிதில் தோற்கடிக்கும் ஆறு சுவை உண்டிகள், முதல்தர இசைவாணர்களின் இசை யரங்குகள், பரத நாட்டியம், கும்பகோணத்துக் கொழுந்து வெற்றிலை, நெய்யில் வறுத்தெடுத்த களிப்பாக்கு என்று இப்படி நாளெல்லாம், ஏன் இரவு பதினொரு மணி வரையில், மாறி மாறிக் கிடைத்துக் கொண்டே இருந்தன. எங்கே பார்த்தாலும் விருந்தைப் பற்றியே பேச்சு; அது முடிந்தால் இசை விருந்துப் பேச்சு, பரத நாட்டியப் பேச்சு: "ஆஹா! மிக நல்ல ஏற்பாடு; முதல்தர ஏற்பாடு என்று வெற்றிலையை மடித்து வாயில் போட்டுக் குதப்பிக் கொண்டே அனைவரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

இத்தனை கோலாகலங்கள் இருந்ததால்தான் அன்று இரவு நான் மிகவும் தொல்லைப்பட வேண்டியதாய் விட்டது. பகலெல்லாம் ஒரே களியாட்டம், கண்ணுக்கு