பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாவில்லை


'நா ன் மனிதனுக்கு மரணமில்லை என்கிறேன்’ என்று மிடுக்கோடு கூறிக்கொண்டே எழுந்து நின்றார் பாரதியார். ஈரோட்டிற்கு அருகிலுள்ள கருங்கல் பாளையத்திலே நடந்த நிகழ்ச்சி. அங்கேயுள்ள நூல் நிலையத்தின் ஆண்டுவிழாவிலே அவர் செய்த கர்ஜனையின் முதல் எடுப்பு இது. சொற்பொழிவைத் தொடங்கும் வரையில் பாரதியார் சிலை போல மேடையிலே அமர்ந்தார். அசைவில்லை; பேச்சில்லை; கண் இமைப்பில்லை. அப்படி இருந்தவர் தடாலென்று எழுந்து நின்றார். மேலே சொன்னபடி வார்த்தை சொல்லலானார். பேச்சிலே அச்சமில்லை. கலக்கமில்லை; ஐயத்தை மருந்துக்குக் கூடக் காணோம். யமனை அப்பொழுதுதான் வீழ்த்தி விட்டு நின்ற பரமேசுவரன் பேசுவது போலப் பேசினார். கூடியிருந்த அத்தனை மக்கள் உள்ளத்திலும் இனிச் சாவில்லை என்ற நம்பிக்கை அந்த நொடியிலே உதயமாகி நின்றது.

ஆனால் அவ்வாறு இடிமுழக்கம் செய்து விட்டுச் சென்னைக்குத் திரும்பிய பாரதியார் ஒரு திங்கள் கூட உடல் சுமந்திருக்கவில்லை. அவர் கருங்கல்பாளையத்திற்கு வந்தது 1921 ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்களில்; அடுத்த செப்டம்பர் 11 ஆம் தேதி அவர் உடல் சாம்பலாயிற்று.

காலா, உனைநான் சிறுபுல்லென
மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா! சற்றே உனை
மிதிக்கிறேன்