பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எங்கள் வீடு

83


சுற்ற முடியுமா? அந்தக் குருவிகளுக்கு அந்த இடங்களெல்லாம் தனி உரிமையாக ஏற்பட்டுவிட்டன.

எனக்கு முதலில் அந்தக் குருவிகளைக் கண்டதும் கோபம் கோபமாக வந்தது. என்னுடைய வீட்டில் இவ்வாறு உரிமை கொண்டாட அவற்றிற்கு இத்தனை துணிச்சலா என்று சீறினேன். என் அனுமதியின்றி உள்ளே நுழையலாமா? பஞ்சுமெத்தையைச் சுருட்டி நான் கட்டிலிலே வைப்பேன். பெண் குருவி அந்த மெத்தையிலிருந்து உரிமையோடு தன் மூக்கால் கொத்தி, பஞ்செடுத்துத் தன் குஞ்சுகளுக்கு மெத்தை செய்யக் கொண்டுபோகும். வீட்டிற்கு முன்புறத்திலே அழகிய பூச்செடிகளை முன்னெச்சரிக்கையாகவே அவற்றை விற்கும் தோட்டத்திலிருந்து வாங்கிவந்து நட்டு வைத்திருந்தேன். அவற்றிற்குத் தண்ணீர் ஊற்றும்போதெல்லாம் அவை என்னுடைய செடிகள், அவை என் மனைவியின் கூந்தலை அணிசெய்ய வண்ணவண்ணமான மலர்களைக் கொடுக்கக் காத்திருக்கின்றன என்று நான் பூரிப்போடு எண்ணமிடுவேன். செடிகளுக்குப் பக்கத்திலே நல்ல வெண்மணலாக நான்கு வண்டிகளில் கொண்டு வந்து பரப்பி வைத்திருந்தேன். மாலை வேளைகளிலே அங்கே நானும் என் மனைவியும் இன்பமுடன அமர்ந்து பேசி மகிழ்வதற்காக நான் செய்த முன்னேற்பாடு அது.

மாலை வேளையிலே பார்த்தால் அந்தக் குருவிகள் கொஞ்சமும் என்னைச் சட்டை செய்யாமல் ஒரு பூச்செடியின் மேலே அமர்ந்து கொள்ளும், ஒன்றோடொன்று விளையாடிக்கொண்டே ஒரு செடியிலிருந்து மற்றொன்றிற்கு ஒயிலாகத் தாவிச் செல்லும். பிறகு இரண்டும் கொஞ்சிக்கொண்டே வெண்மணலின்மீது பறந்துகுதித்து அமரும். பெட்டை மணலிலே படுத்து இறகுகளைக் கோதி மணல் விளையாடிக்கொண்டிருக்கும். அதைப்