பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எங்கள் வீடு

85



அனல் கொதித்தது. கோபம் கரைபுரண்டு வெளிப்பட்டது. நான் உயிராகப் போற்றும் திருக்குறள் என்றும் பாராமல் அந்நூலை எடுத்து அக்குருவிகளின் மேலே ஆவேசத்தோடு வீசினேன். குருவிகள் சட் சட் சட் சட் என்று இரைந்து வைது கொண்டே பறந்து விட்டன. தாமரை முகை விளக்குப் பல சுக்குகளாக உடைந்து தரையிலே விழுந்தது. அந்த அரவம் கேட்டு என் மனைவி ஓடிவந்தாள். பெருந்தொகை கொடுத்து ஆர்வத்தோடு வாங்கிய அந்த விளக்கின் கதியைக் கண்டு அவள் சற்று நேரம் பேச்சிழந்து நின்றாள். பிறகு நடந்ததை ஒருவாறு அறிந்துகொண்டு, "நம்மிடத்திலே அடைக்கலம் புகுகின்ற சிட்டுக்குருவிகளை இப்படி விரட்ட லாமா, பாபமல்லவா?’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள். "அடைக்கலாங் குருவிகளா அவை ? அவைகள் தானே இந்த வீட்டிற்குச் சொந்தம் கொண்டாடுகின்றன? நாம்தான் இங்கே அடைக்கலம் புகுந்ததாக அவைகளுக்கு எண்ணம்" என்று ஆத்திரத்தோடு முழங்கினேன். எனது எண்ணப்போக்கை அவள் அறிந்துகொள்ளவில்லை. உடைந்த விளக்குத் துண்டுகளை ஒன்றுசேர்த்து எடுத்தெறியும் பணியிலே அவள் ஈடுபட்டாள். நான் மெளனமாக அமர்ந்து நேரம் கழிவதையும் கவனியாமல் ஏதேதோ எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன்.

பொழுது சாய்ந்து இருள் பரவத் தொடங்கிற்று. அறையில் அடுத்த கோடியில் உடையாமலிருந்த மற்றொரு மின்சார விளக்கை ஏற்றவும் கருதாமல் நான் வீற்றிருந்தேன். என் எண்ணத்திலிருந்து அந்தக் குருவிகளை அகற்ற முடியவில்லை. என் உள்ளத்திலே அவை ஒரு நீங்காத சுமையாகிவிட்டன. ஒரு பல்லி சுவரிலே ஒட்டிக்கொண்டு ஊர்ந்துவந்து வாயைச் சப்பி நச்சு நச்சென்று ஒலி எழுப்பிற்று. 'உனக்கும் இந்த வீடு