பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

நந்தா ஒளி



மாம்; இதே மாமரந்தான். இதன் தண்ணிழலில் அமர்ந்து நீ உன் காதலியோடு நேற்று மாலை கொஞ்சிக் குலாவும்போதுதான் அவன் யமனாக வந்து சேர்ந்தான். நொடிப் பொழுதிலே, கண்ணெடுத்துப் பார்ப்பதற்கு முன்னாலே உன் காதலி துடித்து உயிரற்று விழுந்தாள். அந்தோ! எல்லாம் என் கண் முன்னாலேயே நடந்தது. இதே மரந்தான். இங்குதான் அந்தக் கொடுமை நிகழ்ந்தது. கொலை கொலை, மன்னிக்க முடியாத கொலை. காதல் செய்த பெண்மையின் உயிர்க் கொலை.

இன்று எதற்காக நீ மறுபடியும் இந்தக் கொலைக் களத்துக்கு வந்திருக்கிறாய்? உன் உயிரையும் வாங்கி விடட்டும் என்று வந்திருக்கிறாயா? அப்படித்தானிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதே மாலை வேளையிலே இன்று நீ இந்த மரத்தையே நாடி வருவாயா?

நேற்று உனக்கு உன் உயிர் வெல்லம். இன்று அது உனக்கு எட்டிக்காய்; ஒரு பெருஞ்சுமை, அதைச் சுமக்க முடியாமல் தத்தளிக்கிறாயா?

நேற்று அந்தக் கூற்றுவனைக் கண்டு நடுங்கினாய்.இன்று அவனை வரவேற்க வந்திருக்கிறாயா? அவனைத் தேடி அலைகிறாயா? அவன் கொலைக் கண்களிலே விழத்துடிக்கிறாயா?

ஒரு வேளை, உன் காதலி உனக்கு வேடிக்கை காட்ட உயிரற்றவள் போல் நேற்று நடித்திருப்பாள் என்று நம்பி, இன்று அவளத் தேடி வந்திருக்கிறாயா? அவள்