பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

பூவின் சிரிப்பு



பொங்கச் செய்திருக்கிறாய் உனது பாட்டொலியிலே உலகம் விண்ணவரின் இன்ப உலகமாக மாறியதை நான் கண்டிருக்கிறேன். உலகமே ஒரு இன்ப மோகினியானதை உணர்ந்து மெய்மறந்திருக்கிறேன்.

இப்பொழுது எல்லாம் கனவாகப் போய்விட்டனவே! உன் குரல் இனி ஒலிக்காதா? உன் குரலில் மீண்டும் தேன் சுரக்காதா? அன்பு வறண்டுபோன பிறகு நீ பாடுவாயா? அழுகைப் பாட்டுக்கும் அப்பாற்பட்டதாக வல்லவோ உன்னுடைய அவலம் தோன்றுகிறது? அழுகையில் ஆறுதல் தோன்றுகிறது. உள்ளத்தில் உறைந்து கிடக்கும் துன்பத்தை ஒப்பாரி கண்ணீராகக் கரைத்து மெதுவாக வெளியேற்றுகிறது. உனது துன்பம் கரையக் கூடியதாக இல்லையே! பாடு, குயிலா அவலப் பாட்டாவது பாடு. உன் நெஞ்சம் கொதிப்படங்கட்டும்.

என்னை ஏன் இப்படி உற்றுப் பார்க்கிறாய்? எனக்குச் சாபம் கொடுக்கிறாயா?

அந்த மூடனைத் தடுக்காதது என் குற்றந்தான். ஆனால் நான் அவனைத் திரும்பிப் பார்ப்பதற்கு முன்னாலேயே அவன் குறி வைத்துச் சுட்டு விட்டானே? துப்பாக்கி வெடியின் இடிக் குரல் கேட்ட பிறகுதானே நான் திடுக்கிட்டுத் திரும்பினேன்?

அந்தக் குண்டு தவறி என்மேல் பாய்ந்திருந்தால் நான் எப்படித் துடித்திருப்பேன்! அவனும் எப்படி எப்படித் துடித்திருப்பான்! எனக்காக அவன் எத்தனை பரிவு காட்டியிருப்பான்!

நீயும் என்னைப் போல் ஓர் உயிர்தானே? என்னைவிட நீ மனித இனத்துக்கு மேலான இன்ப மூட்டுகிறாய். உனது பாடல் மனிதனை வானுலகத்துக்கு இழுத்துச் செல்லுகிறது. எனக்கு அத்தனை வன்மை ஏது ?