பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பே வழி

92



ற்ற உயிர்களுக்கில்லாத சில சிறப்பியல்புகள் மனிதனுக்குண்டு. அந்தச் சிறப்பியல்புகளால் அவன் ஓங்கியிருக்கிறானா அல்லது தனது அழிவுக்கே வழிதேடிக் கொண்டிருக்கிறானா என்று ஆராய்கின்றபோது நேர் மாறான கருத்துக்கள் இன்று நம்மை வந்து மோதுகின்றன.

மனிதனுக்கு அறிவிருக்கிறது; பிறருடைய அனுபவங்களை நேரிற் கண்டும், நூல்களின் மூலம் ஆராய்ந்தும் தீமையை விலக்கி நன்மையை நாட்டக்கூடிய வல்லமை இருக்கிறது. சுருங்கச் சொன்னால் மனம் என்ற பெருங் கொடை இருக்கிறது. மனிதனுக்கு வாய்த்துள்ள மனத்தைப்போல அவ்வளவு பக்குவமும் நுட்பமும் வாய்ந்த மனம் வேறு உயிர்களுக்கில்லை.

மனத்தின் ஆற்றலால் மனிதன் எவ்வளவோ அற்புதங்களை உண்டுபண்ணியிருக்கிறான். ஆனால் அவன் உண்டுபண்ண வேண்டியவை இன்னும் பல உண்டு. விஞ்ஞானத்துறையிலும், இயற்கையை வெல்வதிலும் அவன் மேலும் செய்யவேண்டியவற்றைப்பற்றி நான் இப்பொழுது கூற முற்படவில்லை. எத்தனையோ முயற்சிகளில் மனித இனம் பெரியதோர் ஆர்வம் காட்டுகிறது. ஆனால் உள்ளத்தின் இழிந்த உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்துவதிலும் அவற்றை மடைமாற்றி இன்பத்திற்கு வழி கோலுவதிலும் அவ்வளவு பெரிய ஆர்வம் காணப் படவில்லை.