பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பே வழி

94



கிறோம். ஒரு நாயின் அனுபவம் அந்த நாய்க்குமட்டுமே பயன்படலாம். ஆனால் அதனுடைய அனுபவத்தைக் கொண்டு மற்றொரு நாய் பயனடைய முடியாது. இந்த வல்லமை மனித இனத்திற்குத் தான் உண்டு என்று கூறிக் கொள்வதில் நாம் சிறிதும் தயங்குவதில்லை. ஆனால் உண்மையிலே பிறர் அனுபவத்தைக் கொண்டு நாம் பயனடைந்திருக்கிறோமா? சிறு முயற்சிகளிலே பயனடைந்திருக்கலாம். ஆனால் போர் என்ற வெறியை ஒடுக்குவதிலும் மனத்தின் இழிந்த உணர்ச்சிகளை அடக்குவதிலும் நாம் பயனடைந்திருக்கிறோமா? உலக வரலாறு இதற்குச் சான்று கூறவே இல்லை.

பழங்காலத்துப் போர்களை விட்டுவிடுவோம். நாகரிகத்திலும், விஞ்ஞானத்திலும் மிகவும் முன்னேற்ற மடைந்துள்ள இந்த இருபதாம் நூற்றாண்டிலே முதல் உலகப் போர் நச்சுப்புகையோடு தனது கொடிய அழிவுக் கூத்தை ஆடிக் காண்பித்து முடிந்து ஒரு இருபத்தைந்து ஆண்டுகள்கூட ஆகவில்லை. அதற்குள்ளேயே மற்றொரு குலை நடுங்கும் உலகப் போர் மூண்டுவிட்டது. நச்சுப் புகையையும் விஞ்சியதான அணுப்புகையிலே அந்தப் போர் வெறிக்காட்சி தந்தது.

மனிதன் தன்னைப் பற்றிப் பெருமைகொள்ள முடியுமா என்று கேட்கிறேன். அவனுடைய விலங்குணர்ச்சிகள் மாறு முன்பு பெருமைப்பட அவனுக்குத் தகுதியே கிடையாது. இன்று மனிதனுக்குக் கிடைத்திருக்கும் அழிவுப் படைகளைப் பார்க்கும்போது மற்றொரு பெரும் போர் தொடங்குமானால் மனித இனமே பூண்டோடு அழிந்து போகும் என்று சிறந்த சிந்தனையாளர்களும் அஞ்சும்படியாக உள்ளது. இந்த நிலையிலேதான் மனிதன் அமைதியாக எண்ணிப் பார்க்கவேண்டும்.